மறைமலைநகர்: அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
1972-ம் ஆண்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட அதிமுக. 32 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. சாதாரண தொண்டன் கூட கட்சியின் உயரிய பதவிக்கு வரக்கூடிய ஒரே இயக்கம் அதிமுகதான். இது உயிரோட்டமுள்ள கட்சி. இதனை யாராலும் அழிக்க முடியாது. தற்போதைய தவெக, ஆட்சியின் 6 மாத காலத்தில் மக்களுக்கு விலைவாசி உயர்வுதான் பரிசாகக் கிடைத்துள்ளது.
அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தீபாவளி நேரத்தில் ஆவின் இனிப்பு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
செஞ்சி பகுதியில் காணாமல் போன சிறுமியை 30 நாட்களுக்கும் மேலாகியும் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதால் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. நாகப்பட்டினத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சேலம், கோவை உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் பெயரை மாற்றி அண்ணன் சீர் திட்டம் என்று அறிவித்துள்ளனர். தற்போதைய ஆட்சியில் திட்டமிடல் இல்லாமல் நிர்வாகம் நடைபெறுகிறது. பிரேக் இல்லாத வாகனத்தைப் போல அரசு செயல்படுகிறது.
விவசாயிகள், செவிலியர்கள்: என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது. இந்த ஆட்சியைக் கவிழ்க்க யாரும் சதி செய்ய வேண்டியதில்லை. தவெகவினரே ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள். பீனிக்ஸ் பறவையைப் போல தமிழகத்தில் மீண்டும் அதிமுக. ஆட்சி மலரும். இவ்வாறு அவர் பேசினார்.
தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்: ஜவுளி, இனிப்புகள் விற்பனை களைகட்டியது
