திண்டுக்கல்,

மனைவியை கொன்று புதைத்த தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெண் மாயம்

திண்டுக்கல் அருகே இரண்டெல்லப்பாறையைச் சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 36). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கவுசல்யா ( வயது 32) என்ற மனைவியும் இருந்தார். இந்த தம்பதிக்கு 5 மற்றும் 2 வயதில் மகள்கள் உள்ளனர். வீட்டில் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்த கவுசல்யா திடீரென மாயமானார். கவுசல்யாவின் பெற்றோர் லாரன்சிடம் கவுசல்யாவை பற்றி கேட்டனர். அப்போது அவர் முறையாக பதில் அளிக்க வில்லை. இதையடுத்து அவர்கள், தங்கள் மகளை கண்டுபிடித்து தரக்கோரி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் லாரன்ஸை பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், லாரன்ஸ், தனது மனைவியை பெற்றோர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கூட்டிச் சென்றேன். பின்பு கல்நூத்தாம்பட்டி அருகே கவுசல்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டி திண்டுக்கல் - நத்தம் சாலை பகுதியில் மணல் குவியலில் தோண்டி புதைத்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் எதற்காக கொலை செய்தாய் என விசாரித்தனர். ஆனால் அதற்கு அவர் முறையான பதில் அளிக்க வில்லை.

இதனைத்தொடர்ந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சக்தி வேல் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு லாரன்சை அழைத்து சென்றனர். பின்னர் கிழக்கு தாசில்தார் பானுலட்சுமி, வருவாய் ஆய்வாளர் வினோத், அடியனூத்து கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரதாப் ஆகியோர் முன்னிலையில் கவுசல்யா உடல் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட 2 இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர்.