சென்னை: வில்லிவாக்கத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு நடைபெற்ற வளைகாப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கர்ப்பிணிகளுக்கு சீதனப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக வளைகாப்பு விழா வில்லிவாக்கம், சிட்கோ நகர் சமுதாய நலக் கூட அரங்கில் நேற்று நடைபெற்றது. விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விழாவுக்கு தலைமை தாங்கி 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, நலங்கு வைத்து வாழ்த்தினார்.
தொடர்ந்து ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்களுக்கும் பட்டுப்புடவை, வளையல், பழங்கள், இனிப்புகள், மாலை மற்றும் முதல்வர் சார்பாகவும், தன் சார்பாகவும் பரிசாக குழந்தைகளுக்கான முதல் தொட்டில் உள்ளிட்ட வளைகாப்புச் சீதனப் பொருட்களை அமைச்சர் வழங்கினார். நிறைவாக, விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட 5 வகையான அறுசுவை கலவை சாதங்களுடன் விருந்து பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: ஒரு தாய் நினைத்தால் நாட்டையே ஆளக்கூடிய நல்ல தலைவர்களையும், ஏன் முதல்வர்களையும் கூட உருவாக்க முடியும். எனவே, ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்த தாய்மார்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். தனித்திறமையை அடையாளம் கண்டு விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் அவர்களை ஈடுபடுத்தி சாதனைகளை நிகழ்த்த உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவின் ஒரு பகுதியாக கரு உருவான நாள் முதல் 2 வயது வரையிலான குழந்தைகளின் வளர்ச்சிக் காலமான, முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம் குறித்தும், கர்ப்பிணிகள் பின்பற்றவேண்டிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதார முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய கண்காட்சியும், மாநகராட்சி சார்பில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவப் பரிசோதனை முகாமும் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில் சென்னை மாவட்ட ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், தென்சென்னை மாவட்ட திட்ட அலுவலர் இரா.ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘பிரேக் இல்லாத வாகனம் போல் தமிழக அரசு’- பழனிசாமி குற்றச்சாட்டு
