சென்னை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 19). இவர் தனது மாமா ரமேசுடன் சேர்ந்து வீடுகளில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். பிரசாந்தின் தாய் எழில்செல்வி சென்னையில் உள்ள ஒரு நடிகை வீட்டில், வீட்டு வேலை செய்து வருகிறார். வேலை இல்லாத நாட்களில் பிரசாந்த் சென்னையில் வசிக்கும் தாயை பார்க்க வருவது வழக்கம்.

மேலும், சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தின் நண்பர் களான தேவராசு (19), தினேஷ் (23) ஆகியோரும் சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தனர். தாயை பார்க்க வரும் பிரசாந்த், இவர்களையும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். இதில் தேவராசு, ஒரு இளம்பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி தனது தாயை பார்க்க செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு பிரசாந்த் சென்னைக்கு வந்தார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. தாயும் தன்னை பார்க்க மகன் வரவில்லை என்று கூறினார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பிரசாந்தை தேடி வந்தனர்.

கடைசியாக பிரசாந்த் யாரிடம் அதிகம் பேசியுள்ளார் என அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் நண்பர்களான தேவராசுவும், தினேசும் சிக்கினர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, பிரசாந்தை சென்னை அடுத்த திருப்பாலைவனம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பழவேற்காட்டுக்கு அழைத்துச் சென்று கொன்று புதைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

இந்த தகவலின்பேரில் திருப்பாலைவனம் போலீசார் பழவேற் காட்டில் சாத்தான்குப்பம் கடற்கரை பகுதியில் புதைக்கப்பட்ட பிரசாந்தின் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில், தேவராசுவின் மனைவியுடன் கொலையான பிரசாந்துக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

சம்பவத்தன்று சென்னைக்கு வந்த பிரசாந்த், நண்பரான தேவராசுவின் மனைவியுடன் பல இடங்களுக்குச் சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தேவராசு, பிரசாந்தை கொலை செய்யத் திட்டமிட்டு தினேசுடன் சேர்ந்து மது குடிக்கலாம் என அவரை ஆள்நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று பீர் பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை செய்து புதைத்தது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.