தஞ்சாவூர்,

தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு மற்றும் கார வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், தரமான மூலப்பொருட்களைக் கொண்டு பலகாரங்களைத் தயாரிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

52 இனிப்பு, கார வகைகளின் மாதிரிகள் சேகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தலைமையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் மூலம் இந்த ஆய்வு நடைபெற்றது.

அப்போது பல்வேறு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரம், தயாரிப்பு முறை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், மொத்தம் 52 இனிப்பு, கார உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது

பலகாரங்கள் தயாரிக்கும்போது தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் தயாரித்தால் நடவடிக்கை

ஆய்வகப் பரிசோதனை அறிக்கையில் உணவுப் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கும்போது உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என்றும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.