வாஷிங்டன்,
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜி20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
இந்தியா-கனடா
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். கூட்டத்துக்கு இடையே அங்கு வந்திருந்த பிற நாட்டு வெளியுறவு மந்திரிகளை அவர் சந்தித்தார்.
கனடா வெளியுறவு மந்திரி அனிதா ஆனந்தை அவர் சந்தித்து பேசினார். இந்தியா-கனடா ஒத்துழைப்பின் சீரான வளர்ச்சி குறித்து அனிதா ஆனந்துடன் விவாதித்ததாக அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியுள்ளார்.
இதுபோல், அர்ஜென்டினா, மெக்சிகோ. பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
அர்ஜென்டினா, மெக்சிகோ
அர்ஜென்டினா வெளியுறவு மந்திரி பப்லோ குய்ர்னோவை சந்தித்தபோது, வர்த்தகம், முக்கிய கனிமங்கள், பாதுகாப்பு, அணுசக்தி ஒத்துழைப்பு உள்பட பன்முக பிரச்சினைகள் குறித்து விவாதித்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ வெளியுறவு மந்திரி ராபர்டோ வெலாஸ்கோ அல்வரேசை சந்தித்தார். இருதரப்பு உறவில் புதிய உத்வேகம் அளிக்கும்வகையில் சந்திப்பு அமைந்ததாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
பிரேசில், ஜெர்மனி
பிரேசில் வெளியுறவு மந்திரி மவுரோ வெய்ராவை சந்தித்தபோது. இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஜோஹன் வாடேபுல்லை ஜெய்சங்கர் சந்தித்தார். ஜோஹன்னுடன் பேசுவது எப்போதும் ஆர்வமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளாார்.

