வங்கக் கடலில் முரசு புயல் இன்று (நவ. 1) உருவாக வாய்ப்புள்ள நிலையில், எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விரிவாக தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை அவ்வப்போது சமூக ஊடகங்களில் பதிவிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
”முரசு புயல், தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதன் வெளிப்புற மழை மேகக் கூட்டங்கள் நவ. 2, 3 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாளை அதிகாலை முதல் சென்னையில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
புயல் நமக்கு அருகில் வரும்போது, வெப்பமான சூழல் மாறி, இதமான சூழலுக்குத் திரும்பி மழை பெய்யும். வலுவான மேகக் கூட்டங்களும், மிகத் தீவிரமான மழைப் பொழிவுப் பகுதியும் பெரும்பாலும் கடல் பகுதியிலேயே நீடித்து, தெற்கு மத்திய ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும்.
இருப்பினும், புயல் வடக்கு நோக்கி நகரும்போது, புயலின் வெளிப்புற பகுதிகளில் உருவாகும் மழைக் மேகங்கள், சென்னைக்கு அருகில் வரும்போது, சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழையானது சென்னைக்குக் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், மழை மேகக் கூட்டங்கள் நகரின் பல்வேறு பகுதிகளைக் கடந்து செல்லும்போது, அவ்வப்போது மழை பதிவாகும்.
தெற்கு மத்திய ஆந்திரப் பகுதிகள்: கனமழை முதல் மிக கனமழை மற்றும் அதி கனமழை வரை பதிவாகும் முக்கியப் பகுதியாக இந்தப் பகுதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட தமிழகப் பகுதிகள் (KTCC):
புயல் வடக்கு நோக்கி நகரும்போது, அதன் வெளிப்புற மழை மேகக் கூட்டங்கள் வட தமிழகத்தை அடைந்து மிதமான மழையைக் கொடுக்கலாம்.
சென்னை:
சென்னையில் மிதமான மழை பெய்ய நிச்சயமாக வாய்ப்புள்ளது. ஆனால், கனமழையானது சென்னையிலிருந்து நீண்ட தொலைவில் பெய்யவே வாய்ப்பு அதிகம். அதிர்ஷ்டம் இருந்தால், வட சென்னையின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகத்தின் வடக்கு பகுதிகளான பொன்னேரி - கும்மிடிப்பூண்டி - பழவேற்காடு பகுதிகளுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சுருக்கமாக சொன்னால், இந்தப் புயலால் கிடைக்கும் மழையை, சென்னை தவறவிடாது. ஓரளவுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மிக அதிகமான மழைப்பொழிவு தெற்கு மத்திய ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில்தான் பெய்யும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் சென்னையைக் கடந்து வடக்கு நோக்கி நகரும்போது, ரேடார் மூலம் மேகங்களின் நகர்வைக் கண்காணிப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
புயலின் நகர்வுப் பாதையில் ஏற்படும் சிறிய மாற்றம்கூட சென்னைக்கு குறிப்பிடத்தக்க மழையைக் கொடுக்கலாம்.
அடுத்த இரண்டு நாள்களில் சென்னையின் சில பகுதிகளில், இந்தப் புயல் மூலம் 40–70 மி.மீ. மழை கிடைத்தால்கூட மகிழ்ச்சியாக இருக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.

