கோவையில் பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால், வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த அறிவுலகம் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்டாலும் தற்போதைய த.வெ.க. ஆட்சி காலத்தில் பணி நிறைவு பெற்று திறந்து வைக்கப்பட்டது.
புத்தக முறைகேடு
பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. மற்றும் த.வெ.க.வினர் ஒருவர் மாறி ஒருவர் புகார் தெரிவித்து வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், புத்தக முறைகேடு ஊழல் குறித்து முழுமையாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். அதேபோல தி.மு.க. தரப்பிலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கி உள்ளனர். நேற்றுமுன்தினம் சென்னை அண்ணா நூலகத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நேற்று கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 3 மணி வரை சுமார் 4 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது.
பரிந்துரை செய்தது யார்?
சர்ச்சைக்குரிய அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்திடம் இருந்து நூல்கள் வாங்க பரிந்துரை செய்தது யார், அந்த பதிப்பகங்களில் இருந்து எத்தனை நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, எவ்வளவு பணம் பணப்பட்டுவாடா? என்பது உள்ளிட்ட விவரங்களை அங்கிருந்த நூலகத்துறை அதிகாரிகளிடம் விசாரித்து தகவல்களை திரட்டினர். நூல்களுக்கான பணம் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் இருந்து தான் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அந்த நூலகத்துக்கும் போலீசார் நேரில் சென்று விசாரித்தனர். ரூ.20 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையின் போது சில முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள். கோவையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தகவல்களை ஆய்வு செய்த பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
கலக்கத்தில் அதிகாரிகள்
இதற்கிடையே மதுரை ஐகோர்ட் கிளையும் உடனடியாக இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் இன்று அல்லது நாளைக்குள் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. யார் மீது வழக்கு பாயும் என்பது தெரியாததால் நூலகத்துறை உயர் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

