மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை பல்வேறு அணிகள் டிரேடு செய்ய முயற்சி மேற்கொண்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. இவருக்கும் அணியின் சக வீரர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த இரண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு கடும் போட்டி

இதனால் ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்து வெளியேற விரும்பினார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் அவர் விடுவிக்க விரும்பியது. ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளைத் தவிர மற்ற அணிகள் அவரை டிரேடு செய்ய விரும்பின.

இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2027 தொடருக்காக வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் அணிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அர்ஷ்தீப் சிங்கை கொடுத்து ஹர்திக் பாண்ட்யாவை பெற்ற பஞ்சாப் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு மாறியுள்ளார். இதற்குப் பதிலாக, பஞ்சாப் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியில் இணைந்துள்ளார். இந்த பரிமாற்றம் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 கோடி ரூபாய் ஒப்பந்தம்

ஹர்திக் பாண்டியா ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையுடன் பஞ்சாப் அணியில் இணைகிறார். அதேபோல், அர்ஷ்தீப் சிங் தனது ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையுடன் மும்பை அணிக்கு செல்கிறார்.

2015 முதல் மும்பை அணிக்காக விளையாடிய ஹர்திக், நான்கு ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணியில் இடம் பிடித்துள்ளார். அந்த அணிக்கு முக்கிய ஆல்-ரவுண்டராக திகழ்ந்துள்ளார். மறுபுறம் அர்ஷ்தீப் சிங், பஞ்சாப் அணிக்காக 96 போட்டிகளில் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த மாற்றத்தால் பஞ்சாப் அணியின் பேட்டிங் மற்றும் ஆல்ரவுண்டர் பலம் அதிகரிக்கலாம். மும்பை அணியின் பந்துவீச்சிலும் புதிய வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார். இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவாரா? என்பது சந்தேகம்தான்.

மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்ட்யாவை 16.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்திருந்தது. அர்ஷ்தீப் சிங்கிற்கு 18 கோடி ரூபாய் வழங்குவதால் கையில் உள்ள ஏலத்திற்கான தொகையில் 1.5 கோடி ரூபாயை இழக்க நேரிடும்.