தமிழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குப் பிறகு சாமானியர்கள் வரை சென்றடைந்தவர் கவிஞர் கண்ணதாசன். நிகழாண்டு அவரது நூற்றாண்டு.
கவிஞரின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டியில் பிறந்து, சுவீகாரம் கொடுக்கப்பட்டு, காரைக்குடியில் வளர்ந்து, மாடர்ன் தியேட்டரில் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதும் பணியில் அமர்ந்து, பத்திரிகைத் துறையில் பணியாற்றி, தன்னை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திரைப்படப் பாடலாசிரியராக உயர்த்திக் கொண்டவர் கவியரசர்.
அரசியலில் நாத்திகராக நுழைந்து ஆத்திகராக வெளியேறி திராவிட அரசியலில் அரங்கேறி, தேசிய அரசியலுக்குத் தடம் மாறி பயணித்தாலும் யாராலும் வெறுக்கப்படாத மனிதராக அவரால் தொடர முடிந்தது. அதற்கு அவரது நட்புறவுடன் பழகும் தன்மையும், மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் நேர்மையும் காரணங்கள்.
பல மாற்றங்கள் அவர் வாழ்வில் நடந்தபோதும், வற்றாத ஜீவநதியாக பிரவாகம் எடுக்கும் அவரது கவித்துவத்தின் வீச்சும் தாக்கமும் குறையவே இல்லை. தவிர்க்க முடியாத கவி ஆளுமையாக அவரது தனிவழிப்பயணம் தொடர்ந்தது.
'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தில் தொடங்கித் தனியாகவும், கூட்டாகவும் கவிஞர் கண்ணதாசன் 12 திரைப்படங்களைத் தயாரித்தார்.
அவர் படத்தயாரிப்பாளராக சில வெற்றிப்படங்களை தந்தபோதிலும் அதில் பலன் அடைந்தவர்கள் மற்றவர்களே. அவர் நஷ்டங்களை மட்டுமே சுமந்தார். அதற்காக அவர் அசரவில்லை. மாறாகத் தனது ஏமாற்றங்களை எழுத்தாக்கி கவிதை புனைந்தார்.
கவிஞர் கண்ணதாசனின் மகனும் திரைப்பட இயக்குநருமான அண்ணாதுரை வெளிக்கொணர இருக்கும் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள் இங்கே...
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் சித்தர்களின் தத்துவங்களைச் சாறு பிழந்து கொடுப்பதாக இருந்தன. கண்ணனைத் தனது பாட்டுடைத்தலைவனாக்கிக் கொண்டார். அவனை நினைக்காத நாளில்லை. உண்ணும் போதும் உறங்கும் போதும் எண்ணம் முழுதும் கண்ணன் ஆக்கிரமித்தான். ஆழ்வார்களுக்குப் பிறகு கண்ணன் மீது அதிக பாடல்கள் பாடியது கண்ணதாசன்தான் என்று கவிஞர் வாலி பதிவு செய்திருப்பது உண்மையிலும் உண்மை.
கவிஞரின் ஆப்த நண்பர், இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் கவிஞருக்கு இருந்த நட்பு காவிய நட்பு. 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே' என்கின்ற கண்ணன் புகழ்பாடும் ஆல்பம் இன்றும் தமிழக கோயில்களிலும் இல்லங்களிலும் தினமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
என் வீட்டுக் கண்ணாடி என் முகத்தைக் காட்டவில்லை என்று உளவியல் பேசியவர்; நாளைய பொழுதை இறைவனுக்கு அளித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு என்று அறிவுரை கூறியவர்; உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று ஆறுதல் கூறியவர்; 'காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி', 'சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு' என்று பெண்ணுரிமை பேசும் அதேவேளையில், 'பார்க்கும் கண்கள் பணிய வேண்டும் பாவை உலகம் மதிக்க வேண்டும்' என்றும் நிபந்தனை விதித்தவர்.
'ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி' என்று சூரிய நமஸ்காரத்தை தமிழில் கொடுத்த கவிஞன்; 'பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்று பெண் மனதின் தாபத்தை கவிதையாக வார்த்தெடுத்தவர். அவன் கவிதை அழுகுகளை விரிப்பின் பெருகும்.
கவியரசர் ஒருமுறை காஞ்சிப் பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்திக்க விரும்பினார். அந்தச் சந்திப்பின்போது காஞ்சிப் பெரியவர், இந்து மதத்தின் உயர்வு குறித்து எழுதும்படி பணித்தார். அதையடுத்து அவர் தினமணி கதிரில் அர்த்தமுள்ள இந்துமதம் கட்டுரையை எழுதத் தொடங்கினார். கவியரசரின் மிக உயர்ந்த படைப்புகளின் ஒன்றாக இன்றும் அது போற்றப்படுகிறது.
திரையுலகில் கால்நூற்றாண்டுக்கு மேல் கோலோச்சிய கண்ணதாசன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதினார். கவிதைகளும் வரைந்தார். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தார். புகழ் அவரைத் தேடி வந்தது. அவர் எதையும் தேடிப்போகவில்லை.
நாத்திகர் ஆத்திகர் ஆனார். இதை கேலி செய்தவர்களுக்கு , 'கவிஞன் யானோர் காலக்கணிதம்' எனத் தொடங்கும் தனிப்பாடலில் அளித்த பதில்:
மாறா திருக்கயான் / வனவிலங் கல்லன் / மாற்றம் எனது / மானிட தத்துவம் / மாறும் உலகின் /மகத்துவம் அறிவேன் / எவ்வெவை தீமை / எவ்வெவை நன்மை / என்ப தறிந்தே ஏகுமென் சாலை / தலைவர் மாறுவர் தர்பார் மாறும் / தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் / கொள்வோர் கொள்க / குரைப்போர் குரைக்க
கவிஞர் நடத்திய கண்ணதாசன் பத்திரிகையின் கொள்கையாக ஒரு கவிதையை அவர் எழுதினார்.
போற்றுவார் போற்றட்டும் / புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும் / தொடர்ந்து செல்வேன் / ஏற்றது ஒரு கருத்தை என் மனது என்றால் / எடுத்துரைப்பேன் / எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்
இது இதழியல் பயிலும் எவருக்கும் பாலபாடம்.
*
கவிஞர் தொடக்க காலத்தில் வசனகர்த்தாவாக இருந்தார். ஊமைத்துரையை மையமாக வைத்து ஊமையன்கோட்டை என்ற கதையை உருவாக்கினார். இந்தக் கதை எம்ஜிஆருக்கு பிடித்திருந்தது. இதில் தானே நடிக்க விரும்பினார். கால்ஷீட் கொடுத்தார். இதையடுத்து சிங்காரம் செட்டியார் என்பவர் நிதி கொடுக்க முன்வந்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்தன. படப்பிடிப்பு தொடர்பாக எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது.
'ஊமையன் கோட்டை' படத்தை நிறுத்தியதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் கவிஞர் அதைப்பற்றி கவலைப்படவில்லை. மாலையிட்ட மங்கை என்ற படத்தை, அப்போது சினிமாவில் செல்வாக்கு இழந்திருந்த மகாலிங்கத்தை நடிக்க வைத்து, பெரும் வெற்றிப்படமாகச் செய்தார்.
எம்ஜிஆர் - கண்ணதாசன் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் வந்தும் போவதுமாக இருக்கும்.
சிவாஜி படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதியதுபோல, பல எம்ஜிஆர் படங்களுக்கு கண்ணதாசன்தான் வசனம் எழுதினார். எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் தானே இயக்கும் சொந்தப்படம் எடுக்க எம்ஜிஆர் முற்பட்டபோது, கலந்தாலோசிக்கப் பட்டவர்களில் ஒருவர் கவிஞர் கண்ணதாசன்.
எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படத்தின் முக்கியக் காட்சிகளுக்கு கவிஞர் வசனம் எழுதினார். அப்போதே பஞ்ச் டயலாக் எழுதியவர் கவிஞர். 'என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டு, நம்பிக் கெட்டவர்கள் யாருமில்லை'; 'நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறேன்'; இருளைப் போக்கும் விளக்குக்குத் தனது நிழலைப் போக்கும் சக்தி கிடையாது வீராங்கா' போன்ற வசனங்கள் திரையரங்கை அதிர வைத்தன.
'அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி' என்கிற 'மகாதேவி' திரைப்பட வசனத்துக்குச் சொந்தக்காரர் கவிஞர் கண்ணதாசன்.
மகாதேவி மட்டுமல்ல, மன்னாதி மன்னன், மதுரை வீரன், திருடாதே, தாய்க்குப் பின் தாரம், ராஜாதேசிங்கு, ராணி சம்யுக்தா, அரசிளங்குமரி என்று தனது பல திரைப்படங்களுக்குக் கண்ணதாசன் வசனம் எழுத வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தவர் எம்ஜிஆர்.
கண்ணதாசன் வசனம் எழுதிய அனைத்துப் படங்களும், நாடக மேடை காணாத நேரடிப் படங்கள். பல கதைகள் அவரது சொந்த கற்பனையில் உதித்தவை. ஒரு சில, செவிவழி கர்ணபரம்பரைக் கதைகள். அதனால் நாடக வசனங்களை மெருகேற்றித் தந்தார் என்று யாரும் சொல்ல முடியாது. சிவகங்கை சீமை போன்ற படங்களை, சரித்திர சான்றுகளை வைத்து எழுதி இருந்தாலும், அந்த வசனங்களுக்கு முன்னோடி வசனம் என்று ஏதுமில்லை. பாடலாசிரியர் கண்ணதாசனுக்கு இணையானவர் வசனகர்த்தா கண்ணதாசன்.
*
கவிஞர் படத்தயாரிப்பாளர் என்றாலும் படத்தை தயாரித்தவுடன் அவரது அண்ணன் ஏ.எல். சீனிவாசனுக்கு விற்றுவிடுவார். அண்ணனுக்கு லாபம் கிடைக்கும்.
இவருக்கு எந்தப் பலனும் இருக்காது. இது பல படங்களுக்குத் தொடர்ந்து நடந்தது. 'அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' பாடல் இந்த வருத்தத்தில் உருவானதுதான்.
*
நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அரசியலிலும் திரைத் துறையிலும் இருந்தவர்களின் பிள்ளைகளுடன் ஒன்றாகவே வளர்ந்தோம்.
புனித பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் எங்களுடன் ஒன்றாக படித்தவர்கள் எம்.ஆர். ராதா பிள்ளைகள், எம்ஜிஆர் அண்ணன் எம்.ஜி. சக்ரபாணி மகன்கள், எஸ்எஸ்ஆர் மகன்கள், இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவின் மகன்கள், நடிகை தேவிகாவின் தம்பி, கலை இயக்குனர் தோட்டா தரணி சகோதரர்கள், பின்னாளில் மயிலாப்பூர் எம் எல்ஏவாக இருந்த டி.கே. கபாலியின் மகன் எனப் பட்டியல் நீளும்.
இவர்களில் கவிஞர் பிள்ளைகளான எங்களுக்கு மட்டுமே கிடைத்த விசேட அன்பினை இன்று நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.
மற்றவர்களின் பிள்ளைகளிடம் அவர்கள் தந்தை சார்ந்த கட்சியினர் மட்டுமே வலிய வந்து பேசுவார்கள். ஆனால் அப்பா மாற்றுக்கட்சியில் இருந்தாலும் பழைய பாசம் மறக்காமல் எல்லா கட்சிக் காரர்களும் எங்களோடு அன்போடு பேசுவார்கள்.
திமுகவைவிட்டு அப்பா வெளியேறிவிட்டாலும், அவர் சொந்தப் பணத்தை கட்சிக்கு தண்ணிராக செலவிட்டதை யாருமே மறக்கவில்லை. கவிஞர் மீது எப்போதும் பாசமாக இருந்தனர். அதை எங்கள் மீதும் காட்டினர்.
*
அப்பாவின் தாத்தா பெயர் வெள்ளையன் செட்டியார். இவருக்கு நான்கு பிள்ளைகள். அவர்களில் இரண்டாவது மகன் சாத்தப்பன் செட்டியார். சாத்தப்பன் - விசாலாட்சி தம்பதிக்கு 9 குழந்தைகள். ஆறு பெண்கள், 3 ஆண்கள். இதில் அப்பா எட்டாவது பிள்ளை.
அப்பாவின் தந்தைக்கு பர்மாவில் வியாபாரம். செல்வச் செழிப்புடன் இருந்தார். உலகப் போரின்போது பர்மாவில் ஏற்பட்ட சிக்கலால் சொத்துகளை அங்கேயே விட்டுவிட நேர்ந்தது. குடும்பம் வறுமைக்குத் தள்ளப்பட்டது. அத்துடன் சாத்தப்பன் செட்டியாருக்கு சீட்டாடும் பழக்கமும் இருந்தது.
தன் தந்தை குறித்து அப்பா சொல்லும்போது, என் தந்தைக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மது அருந்த மாட்டார். பிற பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்கூட கிடையாது. அவரிடம் இருந்த ஒரேயொரு கெட்ட பழக்கம் சீட்டாட்டம். எனக்கு சீட்டாட்டம் மட்டும்தான் கிடையாது.
*
அப்பா 12 படங்கள் தயாரித்தார். சந்திரபாபு கதாநாயகனாக நடித்த 'கவலையில்லா மனிதன்' என்ற படத்தை தயாரித்தபோது சந்திரபாபுவின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதாயிற்று. சிவாஜியைக் காட்டிலும் அதிகச் சம்பளம் சந்திரபாபுவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும், சந்திரபாபுவால் அப்பாவுக்குத் தொல்லைகளும் அவமானங்களுமே மிஞ்சின.
நடிகவேள் எம்.ஆர். ராதா, பாலையா, இயக்குநர் சங்கர் இல்லையென்றால் படமே வெளிவந்திருக்காது. இந்த படத் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தை 1980 ஆம் ஆண்டு வரை அப்பாவால் சரி செய்ய முடியவில்லை, அவ்வளவு நஷ்டத்துக்கு காரணமாக சந்திரபாபு மீதும் அப்பா கோபப்படுவற்குப் பதிலாக பரிதாபப்பட்டார்.
சந்திரபாபு, திரைப்பட வாய்ப்புகளை இழந்து, வறுமைக்கு தள்ளப்பட்ட நேரம். தெருவில் நடந்து செல்லும் பாபுவை வசனகர்த்தா பாலமுருகன் சாலையில் பார்க்கிறார்.
சந்திரபாபு பற்றி பாலமுருகன் அப்பாவிடம் தெரிவித்தார். அப்பா அவரிடம், 'சிவாஜி படத்துக்கு வசனம் எழுதுகிறீர்களே, சந்திரபாபுக்கு ஒரு சான்ஸ் பெற்றுக்கொடுங்கள். நான் சொன்னது சந்திரபாபுக்குத் தெரிய வேண்டாம். தெரிந்தால் இந்த உதவியை ஏற்க மாட்டான்' என்று குறிப்பிட்டுள்ளார். பாலமுருகனும் சிவாஜியிடம் போய், சந்திரபாபுக்கு வாய்ப்பு கேட்டுள்ளார்.
''உனக்கென்ன பாபுமீது திடீர் அக்கறை?'' என்று சிவாஜி கேட்டபோது, கவிஞர் கூறியதைத் தெரிவித்துள்ளார். ''கவிஞனா, கவிஞனா சொன்னான்?'' என்று வியப்பு தெரிவித்துள்ளார் சிவாஜி.
அப்பாவின் நஷ்டத்துக்கு சந்திரபாபு காரணம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அப்பாவின் பொருட்டு சந்திரபாபுவுக்கு நீதி, ராஜா போன்ற படங்களில் வேடம் கிடைக்கச் செய்தார் சிவாஜி.
அப்பா தன் வாழ்க்கையில் பலரிடம் ஏமாந்துள்ளார். பெரும் நஷ்டங்களை சந்தித்துள்ளார். ஆனாலும் யார் மீதும் அவருக்கு வஞ்சம் இருந்ததில்லை. கெடுதல் நினைத்தும் இல்லை.
*
அப்போது அம்பாசிடர் கார் வாங்க சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். அப்பா பிரசாரத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, பெருந்தலைவர் காமராஜர் சொல்லி, திருச்சி காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமான காரை, அதற்குரிய விலையை பெற்றுக்கொண்டு அப்பாவுக்கு தந்தார்கள். காமராஜர் தந்த கார் என்று அப்பா அதை பத்திரமாக வைத்திருந்தார். இன்றும் அந்த கார் எங்கள் வீட்டில் நிற்கிறது.
அந்த காரை ஓட்டியவர் டிரைவர் வெங்கடசாமி. அப்பா இறந்தபிறகு, வேறு வேலைக்கு செல்லாமல் எங்கள் வீட்டிலேயே இருந்தார். இவர் இறக்கும் வரை, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் அவர் எங்கள் வீட்டுக்கு வந்து காரை துடைத்துவிட்டு, மதியம் வரை வீட்டு முகப்பில் அமர்ந்திருப்பார். பிறகு வீடு செல்வார்.
*
அப்பா ஒரு பாடலை எழுதும்போது, அந்தப் பாடலுக்கான சூழல் மிகவும் சாதாரணமான ஒன்றாக இருந்தால், அந்தப் பாடல் வெற்றிபெற, அதில் புதிதாக எதையாவது செய்ய முடியுமா என்று யோசிப்பார். நல்ல சிந்தனைகள், நல்ல வார்த்தைகள் தோன்றினால், இது சிவாஜிக்கு, இது எம்ஜிஆருக்கு என்று அன்றைய சூப்பர் ஸ்டார்களுக்கு பதுக்கி வைத்துவிட்டு பிற நடிகர்களுக்கு ஏனோ தானோவென்று வார்த்தைகளை போட்டு பாடலை நிரப்ப மாட்டார். அதனால்தான் பல அற்புதமான பாடல்கள் ஜெமினி, அசோகன், எஸ்.எஸ்.ஆர்., சி.எல். ஆனந்தன் போன்ற நடிகர்கள் படங்களில் இடம்பெற்றன.
*
ஆதிபராசக்தி படத்தை எடுத்து முடித்து முழு படத்தையும் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் தனது குருவான உடுமலை நாராயண கவிக்குப் போட்டுக் காட்டி இருக்கிறார். படத்தைப் பார்த்துவிட்டு நெகிழ்ந்துபோன உடுமலை நாராயணகவி, 'எந்தக் கொம்பனாலும் இப்படிப்பட்டப் பாடல்களை எழுத முடியாது. இவ்வளவு பிரமாதமான படத்தை எடுத்திருக்க; மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது.. என்ன, இந்தப் படத்தில் என்னோட பாட்டு ஒண்ணு இருந்திருந்தா இன்னும் சந்தோஷமாக இருந்திருக்கும்' என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.
தனது குரு ஆசைப்படுகிறார். ஆனால், இன்னொரு பாடலை படத்தில் சேர்ப்பதற்கு கதை இடம் கொடுக்காது. படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங் முடிந்து பின்னணி இசை சேர்ப்பு மட்டுமே மீதம் இருக்கிறது என்ற நிலையில் என்ன செய்ய முடியும்? இருந்தாலும், மனம் கேட்காமல் கே.எஸ்.ஜி. 'உடுமலை நாராயண கவி இப்படிச் சொன்னார் என்ன செய்யலாம்?' என்று அப்பாவிடமே யோசனை கேட்டார்.
அப்பா அவரிடம் 'இந்தப் படத்தில் ஏதாவது ஒரு பாட்டை எடுத்துவிட்டு கவிராயர் பாடலைச் சேர்த்து விடுங்கள்' என்று சொன்னார். கவிஞர் சொன்னதை கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அப்படியே உடுமலை நாராயணகவியிடம் தெரிவித்து, எந்தச் சூழலுக்குப் பாட்டு எழுத விரும்புகிறாரோ, அந்தப் பாடலை எடுத்துவிட்டு அவர் எழுதித் தரும் பாடலைச் சேர்த்துவிடலாம் என்று கண்ணதாசன் கூறியதைச் சொன்னார்.
பதைபதைத்துப்போன உடுமலை நாராயண கவி, 'படத்தில் எல்லா பாடல்களும் கச்சிதமாகப் பொருந்தி இருக்கின்றன; எதையும் நீக்க வேண்டாம், முழு படத்தையும் நான் பார்த்துவிட்டதால் நான் எழுதும் பாடலை 'டைட்டில்' பாடலாக சேர்க்கலாம்' என்று சொல்லிப் பாடல் எழுதித் தந்தார். அந்தப் பாடல் சேர்க்கப்பட்டு டைட்டில் பாடலாக ஒலித்தது.
*
கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையில் அவருக்கு மிக மிக நெருக்கமானவர்கள் என்று சொல்லக்கூடிய எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும், 'துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமியும்; திரையுலக வட்டாரத்தில் இயக்குனர் ஸ்ரீதரும், தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்ப தேவரும் கவிஞரை கலைவாணியின் அவதாரமாகக் கருதிக் கொண்டாடியவர்கள்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கவியரசருக்குமான நெருக்கம் குறித்து சொல்லவே வேண்டாம். அவர்கள் இருவரும் நேரில் சந்திக்காவிட்டால், குறைந்தபட்சம் தொலைபேசியிலாவது சில மணி நேரம் பேசாமல் இருந்த நாள் கிடையாது.
அரசியலில் அண்ணாவின் மீது அளப்பரிய மரியாதை வைத்திருந்தார் கவிஞர். எனக்கு அண்ணாதுரை என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தார். ஈ.வெ.கி. சம்பத்தும் அப்பாவும் இணை பிரிக்க முடியாத நண்பர்கள். 'தமிழ் தேசியக் கட்சி' தொடங்கியதும், அது காங்கிரஸில் இணைந்ததும் அப்பாவும் சம்பத்தும் கலந்து பேசி எடுத்த முடிவு. அண்ணாவுக்கு அடுத்தபடியாக கவிஞர் மதித்த புத்திசாலி சம்பத்தான்.
கண்ணா அருள்வாய்
பரபரப் பாகப் பறந்துசெல் வாரும்
சுறுசுறுப் பாகத் தொடர்ந்துசெல் வாரும்
அதுஇது என்றே அலையும் பேர்களும்
மதுமங் கைஎன மயங்கிநிற் பாரும்
மாளிகை எழுப்ப மனந்துடிப் பாரும்
மண்குடில் விளக்கில் வாழும் மனிதரும்
பள்ளியை நோக்கிப் பறக்கும் பாலரும்
படம்நா டகம்எனப் பார்க்கும் ரசிகரும்
ஐயா பசியென அலறும் பேர்களும்
வெய்யில் கருதாது வேலைசெய்வோரும்
பரந்த உலகின் பங்குதா ரர்கள்!
மானிட வாழ்வின் மகத்துவ மெல்லாம்
ஜனனம் மரணத்தைச் சந்திக்கும் வரையே!
ஆயினும் இவர்கள் அத்தனை பேரும்
காலா காலங்கள் கற்சிலை போல
வாழ்வதாய் எண்ணும் வாயுள பூச்சிகள்!
நன்றி மறந்து நண்பரைக் கொன்று
பன்றிகள் போலப் பசியே கருதி
ஊரை யடித்து உலையிலே போட்டு
லஞ்சம் வாங்கி லட்சம் குவித்து
ஈளை இருமல் இருதய நோய்கள்
கோழை ரத்தக் கொதிப்பு சர்க்கரை
நோயெனப் பலவாய் நொந்து விழுந்து
பாவி என்றொரு பட்டமும் பெற்று
ஆவி பிரிந்து ஆண்டவ னிடத்துப்
போவா ரன்றிப் புகழுடை மனிதர்
எத்தனை பேரோ எவர்தான் அவரோ?
கண்ணா உனைநான் கனிவுடன் கேட்பேன்,
'எண்ணும் செல்வம் எவைஇலை யேனும்
நல்லவன் அன்பன் நன்றி மிகுந்தவன்
என்னும் பெயரே எனக்கருள் வாய்நீ!
சாவின் முனம்உனைச் சந்திக்க முடிந்தால்
இவையே கேட்பேன், இன்னருள் புரிக!'
- கவியரசர் கண்ணதாசன்
(தினமணி தீபாவளி மலரிலிருந்து... )
