சென்னை: ‘சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க, இனி பசுமை பட்டாசு களை அதிக அளவில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப் படும்’ என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்தார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்தாண்டு தீபாவளியைவிட இந்தாண்டு காற்று மாசு 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தியாவிலேயே சென்னையில்தான் காற்று மாசு அதிகம் என்ற தகவல் தவறானது. மழைக்காலம் என்பதாலும் வெளியூர்களுக்கு சென்றவர்கள் வாகனங்களில் மீண்டும் சென்னைக்குத் திரும்புவதாலும் காற்று மாசு அதிகரித்திருக்க வாய்ப்புள்ளது.
காற்று மாசைக் குறைக்கும் நோக்கில், இம்மாத இறுதியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. பசுமை பட்டாசு தயாரிப்பை அதிகரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஆண்டு காற்று மாசை 30 சதவீதம் வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் தயாரிக்கப்படும் பட்டாசுகளை பசுமை பட்டாசுகளாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாநிலம் முழுவதும் புதிதாக 80 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் கருவிகள் விரைவில் பொருத்தப்படும்.
விதிகளை மீறியதற்காக தமிழகத்தில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விதிமீறல் குறைகளை சரிசெய்த 95 தொழிற்சாலைகளுக்கு மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக ஆட்சிக்கு வந்தபின்னர் எவ்வித ஊழலும் இன்றி 6,495 தொழிற்சாலைகளுக்கு புதிதாக இயங்கவும், உரிமத்தை புதுப்பிக்கவும் அனுமதி வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் நீர்நிலைகளை சீரமைக்க ஊக்குவிப்பு: தடையின்மை சான்றிதழ் எளிதில் பெற ‘ஏரி’ இணையதளம்
