குவஹாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த கொல்கத்தா-சைராங் விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலம் சைராங்கில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த கொல்கத்தா-சைராங் விரைவு பயணிகள் ரயில்(ரயில் எண்: 13125), புதன்கிழமை காலை 6.54 மணியளவில், குவஹாத்திக்கு அருகில் உள்ள காம்ரூப் மாவட்டம் டிகாரு ரயில் நிலையம் அருகே ரயில் இன்ஜின் உள்பட ஆறு பெட்டிகள் தடம் புரண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை, ஆனால் பயணிகள் பலர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பயணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வடகிழக்கு எல்லை ரயில்வே தகவலின்படி, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்; யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை. பயணிகள் மாற்று ரயில் மூலம் தங்கள் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
ரயில் தடம் புரண்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், தண்டவாளத்தைச் சீரமைக்கவும் மீட்பு ரயில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், "நான் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது விபத்து குறித்து அறிந்தேன். உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது விபத்து டிகாரு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. ரயின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டிருந்தது. இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ரயிலில் பிரேக் கோளாறு ஏற்பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுவதாக அவர் கூறினார்.

