தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதுடன், அதனைக் கண்டித்த அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி கொலை மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்விஜய் (வயது 30). இவர், பெண் ஒருவருக்கு தனது செல்போன் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பியதுடன், தொலைபேசியில் அழைத்தும் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அந்தப் பெண் கடுமையாகக் கண்டித்துள்ளார். இருப்பினும் அருண்விஜய் தொடர்ந்து அவதூறாக பேசியதுடன், அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

வாலிபர் கைது

இதனால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், இதுகுறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கழுகுமலை போலீசார், அருண்விஜய்யை நேற்று கைது செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.