சென்னை,

மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:-

'Say No to Drugs' என்று சொன்னவர், என்றென்றும் அதைச் சொல்பவர், நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர். 'Drugs-ஐ விடு Sports-ஐ எடு' என்றும் சொன்னவர் நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நமது இலக்கானது, பள்ளிகளிலிருந்தே தொடங்குவது மிகவும் அவசியமானதாகும். 'இளமையில் கல்' என்ற ஔவையாரின் ஆத்திச்சூடிக்கேற்ப, போதைப்பொருட்கள் மற்றும் அவற்றின் தவறான பயன்பாடு குறித்த விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கைக் கல்வியும், இளம் தலைமுறையினரின் மனங்களில் பசுமரத்தாணியாய்ப் பதியச்செய்யப்பட வேண்டும்.

இதற்கான முன்னெடுப்பின் கீழ், பள்ளிகளில் போதைப் பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும் அமைக்கப்படும். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 10581 என்ற உதவி எண்ணைப் பள்ளி வளாகங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த அரசு 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. மேலும், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் தகவல் தெரிவிக்க ஏதுவாக, 'போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு' (Drug free Tamil Nadu) என்ற செயலியின் மூலம் போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த தகவல்களை பகிரும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.