ஐதராபாத்,

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'வாரணாசி'. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புத் தளம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

ஆப்பிள் மேப்ஸில் தெரிந்த பிரமாண்ட செட்

ஐதராபாத்தில் இப்படத்திற்காக பிரமாண்டமான காசி நகர செட் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படப்பிடிப்புத் தளத்தின் வான்வழிக் காட்சிகள் ஆப்பிள் மேப்ஸ் செயலியில் இடம்பெற்றிருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில், ஆப்பிள் மேப்ஸ் மூலம் குறிப்பிட்ட பகுதியை ஒருவர் பெரிதாக்கிப் பார்க்கும்போது, கோவில் போன்ற கட்டிடங்கள், படிக்கட்டுகள், நீர்நிலை மற்றும் பழங்காலக் கட்டிட அமைப்புகளைப் போன்ற பிரமாண்டமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை 'வாரணாசி' படத்திற்காக உருவாக்கப்பட்ட செட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படக்குழு தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை

படத்தின் முக்கியமான காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு விவரங்களைப் படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆப்பிள் மேப்ஸில் இடம்பெற்றுள்ள காட்சிகள் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்புத் தளம்தான் என்பதையோ, ரகசியக் காட்சிகள் கசிந்துள்ளன என்பதையோ படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

படப்பிடிப்பு நிறைவு

இந்த படத்தில் மகேஷ் பாபு 'ருத்ரா' என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா சோப்ரா 'மந்தாகினி' என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். பிருத்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான சாகசத் திரைப்படமாக உருவாகி வரும் 'வாரணாசி' அடுத்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.