பதவிக்கு மாரடிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தில் முட்டுகொடுப்பது கேவலம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவரது அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக வெளியான தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பின.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா, திங்கள்கிழமை பிற்பகல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு எதிராக எழுத்துப்பூர்வமான புகார் மனுவை நேரில் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் புகாரில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.

இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதல்வரும் தலைமைச் செயலரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.

தவறிழைத்த சட்டப்பேரவை உறுப்பினரைக் கண்டித்து, சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டப்பேரவை உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாள்கள் ஆகியிருக்கின்றன.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், எம்.எல்.ஏ. பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.

பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டப்பேரவை உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஆபாச குறுஞ்செய்தி! கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியர் புகார்!!

DMK leader M.K. Stalin has strongly condemned the leaders of allied parties for propping up the Kallakurichi District Collector, calling their actions disgraceful.