தவெக எம்.எல்.ஏ. மீது குற்றச்சாட்டுகள் குறித்து அண்ணாமலை, வெளிப்படையான விசாரணை நடத்தி, அரசின் மீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

அந்த வகையில், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும், த.வெ.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக அரசின் கடமை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.

இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும் என்று கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி… pic.twitter.com/YuPltWNzk7

— K.Annamalai (@annamalai_k) November 24, 2026