திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் பதற்றம் நிலவுகிறது. 750 பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். நயினார் நாகேந்திரன் உள்பட பலர் போலீஸ் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலம் முழுவதும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் திருக்கார்த்திகை நாளில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் இன்று மாலை திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுமா? என்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

விவரங்கள் சேகரிப்பு

இதனிடையே திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றிட தமிழகம் முழுவதும் இருந்து இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு செல்ல முடிவு செய்திருந்தனர்.

இதேபோல் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. கட்சியினர் திருப்பரங்குன்றம் செல்ல ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, நெல்லையில் உள்ள இந்து முன்னணி நிர்வாகிகள் பலரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்கள் தற்போதுள்ள இடம், பயணத் திட்டம் குறித்து நேற்று மாலையில் இருந்து கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.

நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் என மொத்தம் 750 பேர் முன்கூட்டியே நேற்றே அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத படியாக நேற்று நள்ளிரவு 11 மணி முதல் அவர்களது வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நிர்வாகிகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டு காவல்

அதன்படி நெல்லை மாவட்டத்தில் 160 பேரும், தென்காசியில் 130 பேரும், குமரி மாவட்டத்தில் 300 பேரும், தூத்துக்குடியில் 190 பேரும் அடையாளம் காணப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாளை பெருமாள்புரத்தில் உள்ள அவரது வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வள்ளியூர் பகுதியில் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் பண்ணை பாலகிருஷ்ணன், செட்டிகுளம் அம்மா செல்வகுமார், நெல்லை மாநகரில் வடக்கு மாவட்ட தலைவர் முத்துபலவேசம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி மாநில செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் இன்று காலை தனது வீட்டில் இருந்து பாளை நீதிமன்ற பணிக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் அவரை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

இதேபோல் நிர்வாகிகள் அங்குராஜ், ஓம்சக்தி மாரியப்பன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் திசையன்விளையில் உள்ள தனது வீட்டில் இருந்த போது போலீசாரால் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார், நிர்வாகிகள் சக்திவேல் ஆறுமுகம் உள்பட 23 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

மொத்தமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 480 பேர் அடையாளம் காணப்பட்டு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறும் பட்சத்தில் கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என நெல்லை சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.