ஸ்ரீகாகுளம்: 'அக்வான்' புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியது.

இதற்கிடையே, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சோம்பேட்டா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, 'அக்வான்' புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மேற்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

இது ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 70 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 110 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு-வடகிழக்கே 170 கி.மீ தொலைவிலும், பூரிக்கு தெற்கு-தென்மேற்கே 200 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

இந்த புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி முற்பகல் நேரத்தில், கோபால்பூர் அருகே வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

புயல் கரையை கடக்கும்போது, ​​காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 90 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரையைக் கடக்கத் தொடங்கியது அக்வான் புயல்

இந்த நிலையில், புயலின் வெளிப்புற மேகக் கூட்டங்கள் ஏற்கனவே நிலப்பகுதியை அடையத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசாவின் கோபால்பூர் அருகே 'அக்வான்' தீவிர புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு 2 மணி நேரம் நீடிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, புயல் கரையை நெருங்கி வரும் சூழலைக் கண்காணிப்பதற்காக, வியாழக்கிழமை இரவு சுமார் 11 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை, இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தில் இருந்து நிலைமையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ​​முதல்வர் அதிகாரிகளுடன் நேரடியாக ஆலோசனை நடத்தினார். பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதை, அந்த பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் சென்றடைவதை உறுதி செய்யவும், உயிரிழப்பு ஏதுமற்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மழை பெய்து கொண்டிருந்த சூழலில், அவர் அதிகாலை 1.35 மணியளவில் தனது இல்லத்திற்குத் திரும்பினார். புவணேஸ்வரில் 'அக்வான்' புயல் கரையை அடைவதற்கு முன்பான தாக்கம் அதிகாலை 1 மணி முதலே உணரத் தொடங்கியது; பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ஒடிஸாவில் முன்னெச்சரிக்கையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

ஒடிஸா மாநிலத்தில் புயல் கரையைக் கடக்கும் கோபால்பூா் மற்றும் புரி பகுதிகளையொட்டிய சுற்றுலா தலங்கள், கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Cyclone Akvan to make landfall near Odisha's Gopalpur today, process to begin...

ஓய்வுபெறும் ஊழியா்கள் மாதந்தோறும் பிஎஃப் பணம் பெற அனுமதி