சென்னை,
கயல்விழி சார்பில் சாஸ்திரி நகர் போலீசார் நேற்று சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கவிதா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, வங்கி மேலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் கயல்விழிக்கு சொந்தமான வணிகக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பி.ஐ.) கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள லிப்ட் பழுதடைந்திருந்தது தொடர்பாக, வங்கிக் கிளை மேலாளர் ஹர்ஷின் சிங், கட்டிடத்தின் உரிமையாளரான கயல்விழியிடம் புகார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை 20-ம் தேதி வங்கிக்கு நேரில் சென்ற கயல்விழிக்கும், மேலாளர் ஹர்ஷின் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரின் கன்னத்தில் அறைந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.
கயல்விழி கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக, எஸ்.பி.ஐ. வங்கியின் சென்னை மண்டல வணிக அலுவலக மேலாளர் நமச்சிவாயம், ஜூலை 21-ம் தேதி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சாஸ்திரி நகர் போலீசார் கயல்விழி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கின் இறுதி அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
டிசம்பர் 22-ல் அடுத்தகட்ட விசாரணை
இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார் நேற்று சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கவிதா, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

