மதுரை,
குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரை ஐயர் பங்களா, ரோஜா வீதி பகுதியில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் இந்தச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கல்குவாரி டெண்டர் மற்றும் அது தொடர்பான முக்கிய ஆவணங்களைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை நடைபெற்று வரும் மூர்த்தியின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் அமைந்துள்ள கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில், அரசு விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகச் செம்மண் மற்றும் கற்களை வெட்டி எடுத்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவிலேயே ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து தெரியவரும். கடந்த திமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சராக இருந்தவர் மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

