எம தர்மனிடமிருந்து தனது கணவனின் உயிரைப் போராடி வாங்கி வந்த சாவித்திரியின் பெயரை மட்டுமல்லாது அதன் கருவையும் தாங்கி உருவாகி இருக்கிறது சத்தியவான் சாவித்திரி திரைப்படம்.
இயக்குனர் பிரவீன் விஜய் இயக்கத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனைப் போல தானும் வளர வேண்டும் எனும் கனவுடன் இருக்கும் சாவித்திரிக்கு அவரது வீட்டில் நாயகன் சாருகேஷ் உடன் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லக் கூடாது எனும் தாயின் பேச்சை மீறி கீர்த்தி சுரேஷை வழக்கறிஞர் வேலைக்காக மிஷ்கினிடம் பணியாற்ற அனுமதிக்கிறார் நாயகன் சாருகேஷ். ஒரு வழக்கில் தனது குருவை கீர்த்தி சுரேஷ் வெற்றி பெற்று விட அதனால் அவமானப்படுகிறார் மார்க்கண்டேயன்.
இந்நிலையில் கனடா பெண்ணாக வரும் ஷில்பா கொலை வழக்கில் நாயகன் சாருகேஷ் சிக்கிக்கொள்ள தனது குருவான மார்க்கண்டேயனை எதிர்த்து வாதாட வேண்டிய நிலை கீர்த்தி சுரேஷுக்கு ஏற்படுகிறது. இந்த வழக்கு என்ன ஆனது? குருவிடமிருந்து கணவனை காப்பாற்றினாரா கீர்த்தி? என்பதே இத்திரைப்படத்தின் கதை.
கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராக நடிக்கும் இரண்டாம் படம் இது. கனவுகளுடன் இருக்கும் துறுதுறு பெண்ணாக அறிமுகமானத்தில் தொடங்கி துடிப்புடன் மிஷ்கினை எதிர்த்து வாதாடுவது வரை நடிப்பில் பின்னியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். முதல் பாதியில் காதலுடனும், இரண்டாம் பாதியில் ஏமாற்றம் கலந்த தவிப்புடனும் இருக்கும் அவரது நடிப்பு நடிகையர் திலகம் கீர்த்தியை நினைவுபடுத்துகிறது. அவருக்கு இணையாக வலுவான எதிரியாக மிரட்டியிருக்கிறார் மார்க்கண்டேயனாக வரும் மிஷ்கின். தலை குனிந்து கனீர் குரலால் அவர் விசாரணை நடத்தும் இடங்களும், குரல் உயர்த்தி அரங்கை கட்டிப் போடும் வாதத்தாலும் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் மனிதர். நாயகனாக அறிமுகமாகியுள்ள சாருகேஷ் நடிப்பும் கவனிக்கும்படியாக அமைந்திருக்கிறது. முதல் பாதியில் ஆசை கொள்ள செய்து இரண்டாம் பாதியில் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார் சாருகேஷ். இவர்களுடன் நடிகர்கள் பிரகிடா, சில்பா, பாலா சரவணன் என சரியான கதாபாத்திரங்கள் தேர்வு. "கொலை செய்யறவனையே காப்பாத்துறோம் உன்னை காப்பாத்த மாட்டோமா?" எனும் பாலா சரவணனின் வழக்கமான டைமிங் காமெடி கைகொடுத்திருக்கிறது.
படத்தை முழுக்க காப்பாற்றி இருப்பது திரைக்கதை எழுத்து. கதாபாத்திரங்கள் அறிமுகம் தொடங்கி எதிர்பாரா திருப்பங்களைக் கொடுப்பது என வலிமையான எழுத்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சத்தியவான் சாவித்திரி நாடகம் இடையிடையே வருவது, எதிர்பார்ப்பை கொடுக்கும் நீதிமன்ற விசாரணை காட்சிகள், கிளைமேக்ஸ்-க்கு பலம் சேர்த்த முந்தைய வசனங்கள் ஆகியவை திரைப்படத்தை ரசிக்க செய்கின்றன. சில லாஜிக் கேள்விகள் எழுந்தாலும் இடையூறு இல்லாமல் செல்லும் அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது. எதிர்பாராத கிளைமேக்ஸ் ரசிகர்களுக்கு இயக்குநரின் அதிரடி பரிசு.
"ஆம்பளை அடுத்தகட்டம் தான் யோசிப்பான், பொண்ணுங்க பத்து கட்டம் யோசிப்போம்", "நம்பி வாங்கற அடி ரொம்ப வலிக்குதுல்ல" போன்ற வசனங்கள் காட்சிகளின் ஆழத்தை காட்டும் நச் பஞ்ச்.
குறிப்பிட சில இடங்களில் மட்டும் நடக்கும் கதை என்கிற போதும் அதை அலுப்பு ஏற்படாத வகையில் காட்சியாக கண்களுக்கு கொடுத்திருக்கும் அருள் வின்செண்டின் ஒளிப்பதிவுக்கும், கதையோடு அழைத்துப் போகும் ஆழமான சாம் சி எஸ்ஸின் பின்னணி இசைக்கும் பாராட்டுகள். ஆனால் பாடல்கள் எதுவும் ஒர்க் ஆகவில்லை எனும் உண்மையை ஏற்றுக் கொண்டாக வேண்டும். பிரசன்னா ஜி கே-வின் படத்தொகுப்பு படத்தை சரியான தராசில் நிறுத்தியிருக்கிறது.
சாத்தியவான்களுக்கு சவால் விடும் இந்த சத்தியவான் சாவித்திரியை நம்பிக்கையோடு திரையில் ரசிக்கலாம்.
"அப்பா குட்டி"-யின் பாசம் வென்றதா? திரை விமர்சனம்