சென்னை: கடன் கணக்குகளைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதால் வங்கிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என வருமான வரித்துறை இயக்குநர் ஜி.நந்தகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை வருமான வரித்துறையின் நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருமான வரி நுண்ணறிவு மற்றும் குற்றப் புலனாய்வு இயக்குநர் ஜி.நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் நிதிப் பரிவர்த்தனை அறிக்கைகளை (எஸ்.எஃப்.டி.) உரிய காலத்தில் பிழையின்றித் தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கைகளில் பிழைகள் இருந்தால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது.
சேமிப்புக் கணக்குகளில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை நடைபெறுவதை மட்டுமின்றி, கடன் கணக்குகள் உள்ளிட்ட பிற கணக்குகளிலும் நடைபெறும் சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வேண்டும்.
கடன் கணக்குகளைப் பயன்படுத்தி கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதால் வங்கிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
கடந்த ஆண்டு வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் 42 நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆண்டும் ஆய்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு வாரங்களில் சில வங்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படலாம். எனவே, அதற்கு முன்பாகவே அனைத்து அறிக்கைகளையும் பிழையின்றித் தாக்கல் செய்ய வேண்டும்.
அறிக்கைகள் தாக்கல் செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்கு உதவ நாடு முழுவதும் வருமான வரித்துறையின் நோடல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வங்கிகளுக்குத் தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கத் துறை தயாராக உள்ளது. வங்கிகளை அச்சுறுத்துவது நோக்கமல்ல.
நாட்டின் நிதி அமைப்பை மேம்படுத்தவும், பணமோசடி மற்றும் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அனைத்து வங்கிகளும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை: தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு
