திருச்சி,
தமிழக அரசின் பொது வினியோக திட்ட நெல்லையும், அரிசியையும் கேரளாவுக்கு விற்று, கோடிக்கணக்கான ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட தம்பதி, புதிய அரிசி ஆலையும், சொகுசு வீடும் கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அரிசி ஆலை நடத்தி வரும் தம்பதி
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த சண்முகம் (வயது 59), அவரது மனைவி வனிதா(47), மகன் ரெங்கராஜன்(28) ஆகியோர் பொய்கைப்பட்டியில் அரிசி ஆலை நடத்தி வந்தனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் பொது வினியோக திட்டத்துக்கான நெல்லை, அரவை செய்து கொடுக்கும் முகவராகவும் உள்ளனர்.
ரேஷன் அரிசி விற்று பணமோசடி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இருந்து 2025-ம் ஆண்டு இந்த ஆலைக்கு 22.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,700 டன் நெல்லை அரவைக்கு கொடுத்துள்ளனர். ஆனால் நெல்லை அரவை செய்து, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யவில்லை. இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்கு அரவை செய்து கொடுக்குமாறு கொடுத்த 3,700 டன் நெல்லை சண்முகம் தரப்பில் விற்பனை செய்து, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
கேரள வியாபாரிகளுக்கு ரேஷன் அரிசி விற்ற தம்பதி கைது
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சண்முகம், வனிதா, ரெங்கராஜன் ஆகிய 3 பேரை நவம்பர் 10-ம் தேதி கைது செய்தனர். அரவைக்கு வாங்கிய நெல்லையும், அரவை செய்த அரிசியையும் கேரள வியாபாரிகளுக்கு ரூ.12 கோடிக்கு அவர்கள் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.
சொகுசு வீடு, புதிய அரிசி ஆலை
மேலும் போலீசார் இதுகுறித்து கூறியபோது, அரசு பணத்தை மோசடி செய்த சண்முகமும், அவரது மனைவியும் மணப்பாறையில் ரூ.3 கோடி மதிப்பில் சொகுசு வீடு கட்டி வருகின்றனர். பல கோடி மதிப்பில் புதிதாக ஒரு அரிசி ஆலையை கட்டி உள்ளனர். ஏற்கனவே உள்ள அரிசி ஆலையை நவீனமயமாக்கியும், சில இடங்களில் நிலங்களும் வாங்கி உள்ளதாக தெரிகிறது. அது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

