தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த வடமாநிலத் தொழிலாளி குடும்ப தகராறால் ஏற்பட்ட மனவேதனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வடமாநில தொழிலாளி

பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டம், ஜோர்புரா படோரி கிராமத்தைச் சேர்ந்த தேவ்லால்ராம் மகன் சுரேஷ்ராம் (வயது 55). இவரது மனைவி கிருஷ்ணாதேவி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். சுரேஷ்ராம் கடந்த 4 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாவட்டம் வடக்கு காரசேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவருடன் இவரது இரண்டாவது மகனான உட்டம்குமார்(25) என்பவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சுரேஷ்ராம் 6 மாதங்கள் இங்கு வேலை பார்த்துவிட்டு, 6 மாதங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன்படி, சொந்த ஊரிலிருந்து திரும்பி வந்து பணியில் சேர்ந்து 3 மாதங்கள் ஆகின்றன.

குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் சுரேஷ்ராமின் கடைசி மகனுக்குத் திருமணமாகி 2 மாதங்கள் ஆகின்றன. அவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுரேஷ்ராம், உடனடியாக சொந்த ஊருக்குச் செல்ல நினைத்தும் செல்ல முடியாத சூழலில் இருந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு தான் தங்கியிருந்த இடத்தின் அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து அவரது 2-வது மகன் உட்டம்குமார் அளித்த புகாரின் பேரில், முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.