சென்னை,

வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் வழிபாட்டுத் தலங்களை அகற்றும் அரசு நிர்வாகத்தின் அவசர நடவடிக்கைகள் கவலையளிப்பதாக எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் தெரிவித்துள்ளார்.

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அடுத்த மெய்யூர் குருபுரம் பகுதியில் இருந்த பள்ளிவாசல், கடந்த சில தினங்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி வட்டாட்சியரால் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை டூமிங் குப்பம் பகுதியில் குடியிருப்புகள் கட்டப்படவுள்ளதைக் காரணம் காட்டி, அப்பகுதியில் நீண்ட காலமாகச் செயல்பட்டு வரும் பள்ளிவாசலை 10 நாட்களுக்குள் தாங்களாகவே அகற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி (டிடிசி நகர்) மஸ்ஜிதே குபா பள்ளிவாசலுக்கும், அதன் அருகிலுள்ள அற்புத குழந்தை ஏசு தேவாலயத்துக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை அகற்றுவது தொடர்பாக அரசு நிர்வாகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் கெடுபிடிகளும், அவசர நடவடிக்கைகளும் சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.

நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களை அரசு செயல்படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளையும், அவர்களின் மத உணர்வுகளையும் நசுக்கிவிட்டு அத்திட்டங்களை மேற்கொள்வது ஏற்புடையதல்ல. எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், அதன் வரலாற்றுப் பின்னணி, நில உரிமை, வக்ப் வாரிய ஆவணங்கள் மற்றும் வருவாய்த்துறைப் பதிவுகளைத் தீர ஆராயாமல் அதிகாரிகள் தன்னிச்சையாக இடிப்பு நடவடிக்கைகளில் இறங்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தடுத்து நிறுத்த வேண்டும்

சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளை முன்னிறுத்தி ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் தனது அரசியலமைப்புக் கடமையிலிருந்து தவறிவிடக் கூடாது. கவலைக்குரிய விஷயமாக, இந்நடவடிக்கைகளில் குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் அரசு இயந்திரம் குறிவைத்துச் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே வலுப்படுவதை முதல்-அமைச்சர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

அதன்படி, சென்னை டூமிங் குப்பம் பள்ளிவாசலைக் காலி செய்யச் சொல்லி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வழங்கியுள்ள நோட்டீஸை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், திருவள்ளூர் மாவட்டம், மெய்யூர் குருபுரம் பள்ளிவாசல் இருந்த அதே இடத்தில் மீண்டும் செயல்படுவதற்கான உரிய அனுமதியையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும்.மேலும், கூடுவாஞ்சேரி குபா பள்ளிவாசல், அற்புத குழந்தை ஏசு தேவாலயம் மீதான நடவடிக்கையையும் அரசு நிர்வாகம் கைவிட வேண்டும்.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அப்பகுதி மக்கள், வழிபாட்டுத்தலத்தின் நிர்வாகிகள், வக்ப் வாரிய நிர்வாகிகளை அழைத்துப் பேசி வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்பாகக் குடிமக்களின் நம்பிக்கையையும், அரசியலமைப்பு வழங்கியுள்ள வழிபாட்டுச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதே ஒரு நல்லரசுக்கு அடையாளமாகும். இத்தகைய அதிகார அத்துமீறல்களுக்குத் தமிழக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.