சென்னை,

குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கல்குவாரி டெண்டர் குறித்த ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பாலமேடு, அலங்காநல்லூரில் உள்ள குவாரிகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண், கற்கள் வெட்டி எடுத்ததாக வழக்குப்பதிவு செய்திருந்தது தொடர்பாக சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் நடந்து வரும் சோதனைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

“இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் மத்திய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தியை குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.

கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதல்-அமைச்சர் விஜய் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.