அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள கோர்ட் ரூம் டிராமா சத்யவான் சாவித்திரி. மிஷ்கின் , சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இன்று நவம்பர் 20 ஆம் தேதி வெளியாகியுள்ள சத்யவன் சாவித்திரி படத்திம் முழு விமர்சனம் இதோ
சத்யவன் சாவித்திரி கதை
இதிகாச கதையில் சாவித்திரி தனது வாதத் திறமையால் யமதர்மனிடம் இருந்து தனது கணவர் சத்யவானின் உயிரை திரும்பப் பெறுகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படமும் உருவாகியுள்ளது. பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கிறார் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்). பிரபல கிரிமினல் வழக்கறிஞரான மார்கண்டேயன்(மிஷ்கின்) என்பவரிடம் உதவியாளராக சேர அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் சாவித்திரின் அப்பா அவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறார். சாவித்திரி தனது லட்சியத்தைத் தொடர அவரது கணவர் முழு ஆதரவளிக்கிறார். ஒரு வழக்கில் தனது குரு நாதர் மார்கண்டேயனை எதிர்த்து சாவித்தி வாதிட்டு அந்த வழக்கை வெல்கிறார். இந்த நிலையில் சாவித்திரியின் கணவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். கீர்த்தி சுரேஷை பழிவாங்க மாய்கண்டேயன் இந்த வழக்கை கையாள்கிறார். சாவித்திரி தனது கணவரை நிரபராதி என நிரூபித்தாரா என்பதே மீதிக்கதை
இதிகாச கதை சத்யவான் சாவித்திரி கதையின் மையத்தை தழுவி உருவாகியிருந்தாலும் பெண்ணிய பார்வையில் இதிகாசத்தை மறுபரிசீலனை செய்யும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது
விமர்சனம்
இன்றைய சூழலில் பல்வேறு திரைப்படங்கள் இதிகாச கதைகளை நவீன பார்வையில் மறுபரிசீலனை செய்ய முற்படுகின்றன. ஆனால் இதில் பெரும்பாலான படங்கள் ஐடியா அளவில் மட்டுமே புதுமையை வெளிப்படுத்துகின்றன. சத்யவான் சாவித்திரி திரைப்படமும் அந்த வகையில் அடங்கும். சீரியல் பாணியிலான திரைக்கதை , சுவாரஸ்யமற்ற விசாரணைக் காட்சிகள் என பார்வையாளர்களை ஆரம்பம் முதல் இறுதிவரை கதையுடன் ஒன்ற வைக்க தவறுகிறது. ஏற்கனவே பல படங்களில் பார்த்த டெம்பிளேட்டிற்குள் கதை சொல்லப்படுவதால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற சிந்தனைக்கூட பார்வையாளராக நமக்கு வராது. உப்புக்கு சப்பான துணைக் கதாபாத்திரங்கள் , படத்தையே பார்க்காமல் போட்டது போன்ற பின்னணி இசை மற்றும் பாடல்கள் என மொத்த படமும் நான் சிங்கில் உள்ளது
தன்னுடைய இயல்பான நடிப்பால் கீர்த்தி சுரேஷ் படத்தை தாங்கி பிடிக்க முயல்கிறார். மிஷ்கினுக்கு பில்டப் பலமாக கொடுக்கப்பட்டாலும் அவரது கதாபாத்திரம் மிக வீக்காக எழுதப்பட்டிருக்கிறது. முடிந்த அளவிற்கு எக்ஸ்ட்ராவாக நடித்து தனது கதாபாத்திரத்தின் பலவீனத்தை மறைத்திருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

