தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் உலக அதிசய பட்டியலில் இடம்பெற பரிந்துரை செய்யப்படும் என மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் சஞ்சய்குமார் ஜா தெரிவித்தார்.
மத்திய போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய்குமார் ஜா தலைமையில் எம்.பி.க்கள் குழு நேற்று தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வருகை தந்தனர்.
அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோயிலில் தரிசனம் செய்த அவர்கள், அங்குள்ள பழமையான ஓவியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்களை பார்த்தனர். மேலும், கோயில் கட்டுமானம், கல்வெட்டு செய்திகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் குழுவின் தலைவர் சஞ்சய்குமார் ஜா செய்தியாளர்களிடம் கூறியது: தஞ்சாவூர் பெரிய கோயில், இந்தியாவின் ஒரு அதிசயம். தாஜ்மஹால் போலவே பெரியதாகவும், அதைவிடச் சிறப்பாகவும் உள்ளது. இது ஒரு உலகப் பாரம்பரியச் சின்னம். இதை உலக அதிசயமாக அறிவிக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.
அப்போது, எம்.பி.க்கள் எஸ்.கல்யாணசுந்தரம், கே.இ.பிரகாஷ், அனுராக் சர்மா, பாபுசிங் குஷ்வாஹா, கேஷரின் தேவ்சிங் ஜாலா, சுதா மூர்த்தி மற்றும் தஞ்சாவூர் எம்எல்ஏ ஆர்.விஜய்சரவணன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, இக்குழுவினர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று கட்டிடக் கலை மற்றும் கலாச்சார பிரம்மாண்டத்தை பார்வையிட்டனர்.
மண்டல கால வழிபாட்டுக்காக சபரிமலையில் சரண கோஷம் முழங்க கோயில் நடைதிறப்பு
