நெல்லை,

நாகர்கோவில் அருகே பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பெயிண்ட் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை நெல்லை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலியான பெயிண்ட்

நெல்லையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு கடந்த மாதம் பிரபல பெயிண்ட் நிறுவனத்தின் சார்பில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில் அந்த நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி போலியான பெயிண்ட் தயார் செய்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பியூலா தங்கரத்தினம் தலைமையிலான போலீசார் கன்னியாகுமரியில் உள்ள கடைகளில் கடந்த 14-ந் தேதி திடீரென சோதனை நடத்தினர். அப்போது 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 17 போலி பெயிண்ட் டப்பாக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடையின் உரிமையாளரான பிரவீன் என்பவரிடம் விசாரணை செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் நாகர்கோவில் மேலசங்கரன்குழி குரண்டி பகுதியில் உள்ள அஜின்குமார் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில் ஆய்வு செய்தனர்.

வழக்குப்பதிவு

அங்கு பல்வேறு நிறுவனங்களின் பெயரில் உள்ள காலி பெயிண்ட் வாளிகள், ஸ்டிக்கர்கள், மூடிகள், வாளி கைப்பிடிகள், பிளாஸ்டிக் சாக்குபைகள் என சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், போலி பெயிண்ட் டப்பாக்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. விசாரணையில், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான பெயிண்ட்களை அடைத்து வைத்து விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

உடனே அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பிரவீன், மணிகண்டன், அஜின்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.