சென்னை: டாஸ்மாக் கிடங்கு பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக மேற்கொள்வதைக் கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்முதல் செய்து விநியோகம் செய்து வரும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், திருமழிசை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கிடங்குகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்வது, அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பது, மருந்துகளின் இருப்பைக் கண்காணிப்பது, உரிய நேரத்தில் விநியோகம் செய்வது உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட மருத்துவப் பணிகள் கழகம், தற்போது டாஸ்மாக் தொடர்பான ஒப்பந்தப்புள்ளிகளை அறிவிப்பது, மக்கள் நலனைவிட டாஸ்மாக் விற்பனைக்கான கட்டமைப்பைப் பராமரிப்பதற்கே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, டாஸ்மாக் உள்ளிட்ட பிற துறைகள் சார்ந்த பணிகளை மருத்துவப் பணிகள் கழகம் மூலம் மேற்கொள்ளச் செய்யும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின்போது பொதுமக்கள் அளிக்கும் விவரங்களை பகிரக் கூடாது: கணக்கெடுப்பாளர்களுக்கு அறிவுரை
