Viral Video: தங்களது தந்தை தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால், சம்மந்தப்பட்ட கடைக்குள் நுழைந்து சகோதரிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
கடையை அடித்து நொறுக்கிய சகோதரிகள்
வாரணாசியில் உணவகத்திற்குள் நுழைந்த இரண்டு சகோதரிகள் அதனை அடித்து உடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான பதிவுகளில், தங்களது தந்தை அந்த கடை ஊழியர்களால் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஆத்திரமடைந்த இரண்டு சகோதரிகள் தான் இந்த அதிரடி சம்பவத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர். வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த 4ம் தேதி கடை ஊழியர்களுக்கும், அந்த இளம்பெண்களின் தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக வெடித்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகாரளித்து 2 வாரங்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த விவகாரத்தை தாங்களே கையாளலாம் என முடிவு செய்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவியில், அந்த சகோதரில் இருசக்கர வாகனத்தில் குறிப்பிட்ட கடைக்கு வருவது, ஒருவர் செல்போனில் படம்பிடிக்க, மற்றொருவர் அந்த கடை குறித்து பேசுவதும் பதிவாகியுள்ளது. பேசிக்கொண்டிருந்த அந்த பெண் திடீரென உணவக ஊழியர்கள் அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடையை மூடுங்கடா என கூறியபடி அங்கிருந்த தோசை மாவை கீழே எடுத்து கொட்டியுள்ளார்.
Two girls in Varanasi vandalised a dosa shop after their father was allegedly brutally beaten by the shop's employees. With no police action for nearly two weeks, their frustration turned into anger. https://t.co/hQFlA6UCM6
— Ghar Ke Kalesh (@gharkekalesh) November 16, 2026
என் அப்பாவையே அடிப்பீர்களா என கத்திக்கொண்டே, அங்கு பாத்திரத்தில் இருந்த தண்ணீரை ஊழியர் ஒருவர் மீது எடுத்து ஊற்றியுள்ளார். பின்பு அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு உடைத்துள்ளார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் வாடிக்கையாளர்கள் அந்த சகோதரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்..!
இதனிடையே, அங்கு இருந்த தம்பதி, ”இங்கு குழந்தைகள் எல்லாம் இருக்கிறார்கள், சற்று பொறுப்புடனும் பொறுமையாகவும் நடந்து கொள்ளுங்கள்” என வலியுறுத்தியுள்ளனர். அவர்களிடம் இளைய சகோதரி மன்னிப்பு கோரிக்கொண்டிருந்தாலும், மூத்த சகோதரி அவர்களையும் வசைபாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் அந்த குழந்தையின் தாய்க்கும், பொருட்களை கீழே தள்ளி உடைத்த பெண்ணுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட அருகிலிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி பிரித்துவிட்டுள்ளனர்.
சகோதரிகள் மீது வழக்குப்பதிவு:
சகோதரிகளின் செயலால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டதோடு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக, புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நிகழப்போகின்றன? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடை வளாகத்தில் இவ்வளவு பெரிய பிரச்னை வெடித்த போதும், அங்கிருந்த ஊழியர்கள் ஒருவர் கூட அதனை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

