சென்னை,
வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் இன்று தீவிர புயலாக உருவாகக்கூடும். இதனால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்க டல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவியது.
இது திரிகோணமலையில் இருந்து (இலங்கை) சுமார் 640 கி.மீ. கிழக்கு-வடகிழக்கேயும், ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து (அந்தமான் தீவு) 670 கி.மீ. மேற்கேயும், சென்னையில் இருந்து 760 கி.மீ. கிழக்கு-தென்கிழக்கேயும், விசாகப்பட்டினத்தில் இருந்து (ஆந்திரா) 870 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மற்றும் கோபால்பூரில் இருந்து (ஒடிசா) 980 கி.மீ. தெற்கு-தென்கிழக்கேயும் மையம் கொண்டிருந்தது.
அக்வான் புயல்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகு திகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு 'அக்வான்' என பெயரிடப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக நிலவக்கூடும்.
இது மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகிற 20-ந்தேதி நண்பகலில் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திர கடற்கரையில் மிக தீவிர புயலாக கடக்க வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கி.மீ. வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்று
இதேபோல தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வானம் மேகமூட்டம்
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
வருகிற 22-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தமிழக கடலோர பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு வங்கக்கடல், தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளில் 20-ந்தேதி வரை காற்று வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

