திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் காவலராக பணியாற்றி வந்தவர் ரமேஷ்குமார் (வயது 47). இவர் கடந்த 2023-ம் ஆண்டு மதுரையிலிருந்து பணியிட மாற்றத்தில் திருச்சிக்கு வந்தார். பொன்மலை செல்லும் வழியில் உள்ள சிறைக் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது குடும்பத்தினர் மதுரையில் வசிக்கின்றனர்.

காவலர் குடியிருப்பு

இந்நிலையில், நேற்று சிறைக்காவலர் குடியிருப்பிலிருக்கும் ரமேஷ்குமார் வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுபற்றி அங்கி ருந்தர்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலீசார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது ரமேஷ்குமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாத ரமேஷ்குமார், வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலக்குறைவால் இறந்தாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.