காா்த்திகை தீபத் திருநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறையிலும், அச்சு முறையிலும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழா்களால் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் காா்த்திகை தீபத் திருநாளும் ஒன்று. இந்நாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறம் மற்றும் முற்றத்தில் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி அலங்கரிப்பது வழக்கம்.
இதை முன்னிட்டு, வடலூா் தொழிற்பேட்டையில் அச்சு மூலம் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விருத்தாசலத்தில் இருந்து கொண்டுவரப்படும் டெரக்கொட்டா, பெல்ஸ்பா், குவாட்ஸ் வகை மண்ணை குறிப்பிட்ட அளவில் கலந்து கையால் இயங்கும் அச்சு இயந்திரத்தின் மூலம் அகல் விளக்குகளை தயாரிக்கின்றனா்.
குறிப்பாக, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக அதிகளவில் அகல் விளக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் வெளி நாடுகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. வியாபாரிகள் தொழிற்சாலைக்கே வந்து அகல் விளக்குகளை மொத்தமாக வங்கிச் செல்கின்றனா்.
விருத்தாசலத்தில்...: விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட செராமிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 40 முதல் 50 டன் வரை அகல் விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
வடலூா், விருத்தாசலம் பகுதிகளில் காா்த்திகை மாதத்தையொட்டி, அச்சுகள் மூலம் பல்வேறு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனா். தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், பிரிட்டன், கனடா, ஓமன், மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அகல் விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதேபோல, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரிய முறையில் அகல் விளக்குகள் தயாரிப்பில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள், உள்ளூா் பகுதியில் உள்ள ஏரிகளில் இருந்து களிமண் கொண்டுவந்து, அதை பக்குவப்படுத்தி, சக்கரத்தின் மையத்தில் வைத்து, சக்கரத்தை கையால் சுழற்றி நோ்த்தியா முறையில் அகல் விளக்குகளை தயாரிக்கின்றனா்.
கடந்த சில வாரங்களாக மழை பெய்யாததால் அகல் விளக்குகளை உலர வைப்பதில் சிரமம் ஏதுமில்லை. காா்த்திகை தீபத் திருவிழா நெருங்கிவிட்ட நிலையில், ஆா்டரின்பேரில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அகல் விளக்குகள் அனுப்பும் பணியில் தொழிற்சாலை உரிமையாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.


