மேட்டூர்: தவெக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, சட்டம்-ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரீல்ஸை நம்பித்தான் தவெக அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கொலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றைத் தடுக்கத் திராணியற்ற அரசாக இந்த அரசு உள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
மேகேதாட்டு அணை கட்டுவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என கர்நாடக முதல்வர் கூறி வருகிறார். காவிரி ஆற்றில் அணை கட்டுவதோ, வேறு எந்தப் பணிகளையும் மேற்கொள்வதோ கூடாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கர்நாடக முதல்வர் திட்டமிட்டுப் பேசி வருகிறார். அவரது அறிக்கைக்கு தமிழக முதல்வர் இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை.
கர்நாடகாவிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரைப் பெற்றுத்தரவும் இந்த அரசு தவறிவிட்டது. உற்பத்தி குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பா சாகுபடியும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி குறையும்போது விலை உயரத்தான் செய்யும்.
தவெக ஆட்சி அமைந்த கடந்த 6 மாதங்களில் கொலை நடைபெறாத நாளே இல்லை.
தவெக அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, சட்டம்-ஒழுங்குப் பிரச்னையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுமையாகத் தடுக்க வேண்டும். கடந்த நான்கு மாதங்களில் 467 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் மூடப்படுவது சர்வசாதாரணமானதாக இருக்கக்கூடாது. அவற்றை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
“இறைவன் அனைவருக்கும் உரியவர்” - அயோத்தி பயணம் குறித்து அகிலேஷ் யாதவ் கருத்து
