ஆவடி: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே அணுகுச்சாலையில், எவ்விதப் பாதுகாப்புத் தடுப்புகளும் இன்றி தோண்டப்பட்டு இருந்த வடிகால் பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்ததில் இளைஞர் புதன்கிழமை இரவு உயிரிழந்தார்.
அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (25). இவர் பட்டரவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ஹரிபிரதாத் பணி முடிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக நூம்பல் நோக்கித் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்புகள் ஏதுமின்றி திறந்த நிலையில் இருந்தது. இருள் சூழ்ந்த அந்த பகுதியில் வேகமாக வந்த ஹரிபிரசாத், பள்ளம் இருப்பதை கவனிக்காமல் இரு சக்கர வாகனத்துடன் உள்ளே விழுந்துள்ளார். இதில், கட்டுமான பணிகளுக்காக கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் ஆழமாக குத்தியதில், படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார், ஹரிபிரசாத்தின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாவுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது, அம்பத்தூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் கழிவுநீரை மதுரவாயல் அருகே கூவம் ஆற்றில் கலப்பதற்காக அணுகுச் சாலையில் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது முறையான பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்படாததே இளைஞரின் உயிரிழப்புக்கு முழுக் காரணமாகும் என்றனர். மேலும் சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளின் கடுமையான அலட்சியமே ஒரு இளைஞரின் உயிரைப் பறித்துவிட்டதாக உயிரிழந்த ஹரிபிரசாத் உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவித்தனர்.

