புதுக்கோட்டை,

அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பக நிறுவனங்கள் வெளியிட்ட 835 புத்தகங்கள் கண்டறியப்பட்டு புதுக்கோட்டை நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.

பெரியார் அறிவுலகம்

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு கட்டப்பட்டு வந்த பெரியார் அறிவுலகத்தை கடந்த அக்டோபர் 16-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். அங்குள்ள நூலகத்திற்கு புத்தக கொள்முதல் செய்வதில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டினார்.

போலி புத்தகங்கள்

நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள் போலியாக ஏ.ஐ. மூலம் எழுதப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட பதிப்பகத்தின் பெயரில் ஏராளமான போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் பெருமாள் முருகன் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் கண்டறியப்பட்ட ஊழலை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் சோதனை நடத்தி அதனை கண்டறிந்து அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய 2 பதிப்பகங்களின் புத்தகங்களை கண்டறிந்து அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதுக்கோட்டை நூலகம்

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மைய நூலகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் போலி புத்தகங்களை கண்டறியும் பணி தொடங்கியது. நேற்று நல்லிரவு இந்த பணி வந்து முடிவடைந்த நிலையில், புதுக்கோட்டை நூலகத்தில் 835 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக அகல் விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 619 புத்தகங்களும், பீனிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 216 புத்தகங்களும் கண்டறியப்பட்டு நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக நூலகர்கள் தெரிவித்துள்ளனர்.