சென்னை: வியாசர்பாடியில் கடையின் உரிமையாளர் ஒட்டியிருந்த க்யூஆர் குறியீட்டை அகற்றிவிட்டு, தனது வங்கிக் கணக்கு க்யூஆர் குறியீட்டை ஒட்டி, வாடிக்கையாளர்கள் செலுத்திய பணத்தை மோசடி செய்த கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வியாசர்பாடி, பிபி ரோட்டில் வாட்டர் வாஷ் மற்றும் மெக்கானிக் கடை நடத்தி வருபவர் சரத்குமார் (35). இவரது மனைவிக்கு குழந்தை பிறந்த காரணத்தால், கடந்த 2 மாதமாக கடைக்கு வராமல் இருந்தார்.
இந்நிலையில் கடையில் வேலை செய்து வந்த விஜயகுமார் (33) மற்றும் திருமலை ஆகியோர், கடையில் ஒட்டியிருந்த சரத்குமாரின் வங்கி கணக்கின் க்யூஆர் குறியீடு ஸ்டிக்கரை கிழித்து, அதில் அவர்களது வங்கி கணக்கு எண் கொண்ட க்யூஆர் குறியீடு ஸ்டிக்கரை ஒட்டி, அதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடந்த 2 மாதங்களாக செலுத்திய தொகை சுமார் ரூ.2 லட்சத்தை சுருட்டினர்.
இதையறிந்து கேட்டபோது மோசடி பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சரத்குமார் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில், பண மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புளியந்தோப்பைச் சேர்ந்த விஜயகுமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியான திருமலையை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சம்பா நெற்பயிர் காப்பீட்டு காலவரம்பு டிச.1 வரை நீட்டிப்பு: அமைச்சர் ஆர்.வினோத் தகவல்
