கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் அரசு தகைசால் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான தென்னிந்திய அறிவியல் கண்காட்சியை நேற்று அமைச்சர் த.சரத்குமார் தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.. ஆட்சியர் மு.வீரப்பன் உடனிருந்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: மாணவர்கள் செல்போன்களை அதிகளவில் பயன்படுத்துவதால் விளையாட்டுத் திறன், அறிவியல் செய்முறைத் திறன் குறைகிறது. இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகள் மாணவர்களின் கவனத்தை அறிவியல் சார்ந்த கற்றலுக்கு கொண்டு செல்லும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க மாணவர்கள் முயல வேண்டும்.
முந்தைய காலங்களில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் கல்வி கற்பதற்கே பல சிரமங்கள் இருந்தன. ஆனால் இன்றைய மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
அவற்றைப் பயன்படுத்தி பல்வேறு துறைகளில் சாதிக்க வேண்டும். இதுவே முதலமைச்சரின் விருப்பமாகும் என்றார். இந்தக் கண்காட்சியில் 83 அரசுப் பள்ளிகள், 11 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளிட்ட மொத்தம் 118 பள்ளிகளைச் சேர்ந்த 525 மாணவர்கள், 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி பங்கேற்றனர்.
ராப்டீ.எச்வி இ-பைக்கின் புதிய வாடிக்கையாளர் மையம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
