சென்னை,

அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 25). இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு 12 மணி அளவில் பணி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லாமல், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்தச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு, தடுப்புகள் ஏதுமின்றி திறந்த நிலையில் இருந்தது. இருள் சூழ்ந்த அந்தப் பகுதியில் சாலையோர மின்விளக்குகளும் இல்லாத நிலையில் வேகமாக வந்த ஹரிபிரசாத், பள்ளம் இருப்பதை அறியாமல் இருசக்கர வாகனத்துடன் உள்ளே விழுந்துள்ளார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இதில், கட்டுமான பணிகளுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் ஆழமாக குத்தியதால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்துத் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து வந்த மீட்பு படையினர் ஏணி மூலம் பள்ளத்தில் இறங்கி ரத்த வெள்ளத்தில் இருந்த ஹரிபிரசாத் உடலை மீட்டு மேலே கொண்டு வந்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவர் இறந்து அரை மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது என்று தெரிவித்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.