தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஜென்சன் ஹுவாங்கை பதவியில் இருந்து நீக்க என்விடியா இயக்குநர்கள் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக அளவில் செய்யறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பக் கருவிகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அந்நிய நாட்டு உளவாளியுடன் உறவில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில், சீன அரசுக்கு ரகசிய தகவல்களைத் திரட்டித் தரும் பெண் அதிகாரியுடன் தமக்கு ஏற்பட்ட தனிப்பட்ட உறவு குறித்து என்விடியா நிா்வாகத்திடம் ஜென்சன் ஹுவாங் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து என்விடியா இயக்குநர்கள் குழு விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளது.
ஜென்சன் ஹுவாங்குடன் நெருக்கமாக இருந்த ஆலிஸ் ஹுவாங் என்ற பெண், சீனாவுக்காகத் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவில் தொலைக்காட்சிச் செய்தியாளராகப் பணியாற்றிய இவர், பின்னர் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ‘மெகாஸ்பீட்’ தரவு மைய நிறுவனத்தின் உயா்நிலை அதிகாரியாகப் பணியாற்றினார்.
தென்கிழக்கு ஆசியாவில் என்விடியாவின் முக்கிய வாடிக்கையாளராக உருவெடுத்த இந்த நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 480 கோடி டாலர் மதிப்புள்ள சிப்களை என்விடியாவிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.
ஜென்சன் ஹுவாங் சீன உளவாளி ஆலிஸ் ஹுவாங் உடன் உறவில் இருந்ததால் வெளியான தகவலைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் அளவில் சரிந்தன.
இந்த நிலையில், ஜென்சன் ஹுவாங்கிற்கு என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி பவலுடன் திருமணத்தைக் கடந்த உறவு இருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அவரை பதவியிலிருந்து நீக்க என்விடியா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்விடியா நிறுவனம், ஜென்சன் ஹுவாங்கை தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து நீக்கத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 8 சதவிகிதம் அளவுக்குச் சரிந்துள்ளன. இதுவரை சுமார் 650 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 60 லட்சம் கோடி) என்விடியாவின் பங்குகள் சரிந்துள்ளன.

