நியூயார்க்: நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில், கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு அருகில் இருந்த மூன்று அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
நியூயார்க்கின் புரூக்ளின் பிளாட்புஷ் பகுதியில், கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் அருகில் இருந்த 3 தளம் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 2 பேர் பலியாகியுள்ளனர், 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லேசான காயங்களுடன் ஆறு பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிந்து விழுந்த கட்டடத்துடன் சுவரையொட்டியுள்ள மற்றொரு கட்டடம் அப்படியே நின்றாலும், அதன் ஒரு சுவர் முழுமையாக இடிந்து, உள்ளே இருந்த அறைகள், ஒரு படுக்கையறை மற்றும் ஆடைகள் நிறைந்த அலமாரிகள் உள்பட வெளியே தெரிந்தன.
சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்கு இடையே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள், கற்கள் மற்றும் சிதைந்த பாகங்கள் மீது ஏறிச் சென்று, கைகளாலும் மின்சார ரம்பங்களைக் கொண்டும் இடிபாடுகளை அகற்றி இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாலை 6.30 மணியளவில், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் ஒரு துளையிட்டு, அதற்குள் உயிருடன் இருந்த ஒருவரை மீட்டனர். அவர் அங்கிருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தீயணைப்பு வீரர்கள் கைகளால் இடிபாடுகளை அகற்றித் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இடத்திற்கு மேலே டிரோன் ஒன்று பறந்து மீட்புப் பணிகளை கண்காணித்தது.
உயிர் பிழைத்தவர்களைக் கண்டறிய மோப்ப நாய்களையும் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தியுள்ளனர். இரவு நேரம் என்பதால் இருள் சூழ்ந்ததை அடுத்து டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்தனர்.

