2025-26 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 133 கிளை நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ‘பீனிக்ஸ்’ பதிப்பகத்தின் 998 புத்தகங்கள் மற்றும் ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் 531 புத்தகங்கள் என மொத்தம் 1,529 புத்தகங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.

கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான புத்தகக் கொள்முதல் நடைமுறையில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புத்தகங்கள், முக்கியத்துவ மற்ற தலைப்புகள், போலி எழுத்தாளர்கள், சந்தேகத்திற்குரிய பதிப்பகங்கள் மற்றும் அதிகப்படியான விலை நிர்ணயம் ஆகியவை குறித்த புகார்கள் எழுந்தன.

புத்தகங்கள் அகற்றம்

இதன் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் இருந்து இரண்டு குறிப்பிட்ட பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட 1,529 புத்தகங்களை அகற்றுமாறு மாவட்ட நூலக ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மதுரை மாவட்ட நூலக ஆணைக்குழு அதிரடியாக எடுத்துள்ளது.

2025-26 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 133 கிளை நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட ‘பீனிக்ஸ்’ பதிப்பகத்தின் 998 புத்தகங்கள் மற்றும் ‘அகல் விளக்கு’ பதிப்பகத்தின் 531 புத்தகங்கள் என மொத்தம் 1,529 புத்தகங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன. மேலும், அனைத்துப் புத்தகப் பதிப்பகங்களுக்கும் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட ‘பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ்’ பெயரிலான சுமார் 350 புத்தகங்கள், போலி ஐ.எஸ்.பி.என். எண்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகங்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் என கலைஞர் நூற்றாண்டு நூலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், சிவகங்கையிலும் நடவடிக்கை

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிளை நூலகங்களில் இருந்தும் இந்த இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுவரை பீனிக்ஸ் பதிப்பகத்தின் 1,007 புத்தகங்களும், அகல்விளக்கு பதிப்பகத்தின் 1,200 புத்தகங்களும் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 52 கிளை நூலகங்களில் இருந்து அகல்விளக்கு பதிப்பகத்தின் 840 புத்தகங்களும், பீனிக்ஸ் பதிப்பகத்தின் 357 புத்தகங்களும் நூலக அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளன.