டெல் அவிவ்

இஸ்ரேலில் மாற்று பிரதமராக செயல்பட தயார் என நெதன்யாகு அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் தேர்தல்

இஸ்ரேலில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ல் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்கு பிறகு, அந்த நாட்டில் நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பெரும்பான்மை இல்லை

அடுத்த நாளான அக்டோபர் 28-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், நெதன்யாகு அணிக்கு 53 இடங்களும், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு 48 இடங்களும் கிடைத்தன. அரபு கட்சிகள் 19 இடங்களில் வெற்றி பெற்றன. 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 61 இடங்கள் தேவை. இதனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அரபு கட்சிகளின் ஆதரவு ஐசன்கோட்டுக்கு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து, மொத்தம் 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் யஷார் கட்சியின் தலைவரான ஐசன்கோட் ஆட்சியமைக்க உள்ளார். அதற்கான வேலைகளில் அவர் இறங்கியுள்ளார். இதன்படி, நாடாளுமன்ற பதவிகளுக்கான ஆட்களை தேர்வு செய்யும் ஆலோசனை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாற்று பிரதமர்

இதன்படி, இஸ்ரேல் நாட்டின் புதிய சபாநாயகராக, முன்னாள் மந்திரியான மதன் கஹானா அறிவிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் பாதுகாப்பு மந்திரியான அவிக்தோர் லைபர்மேனை வெளிவிவகார துறை மற்றும் பாதுகாப்பு கமிட்டிக்கான தலைவராகவும் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நெதன்யாகு கூறும்போது, எதிர்க்கட்சி தலைவர் ஐசன்கோட் முதலில் பிரதமர் ஆகட்டும். மாற்று பிரதமராக செயல்பட நான் தயார் என்று கூறினார்.

2.5 லட்சம் கூடுதல் வாக்குகள்

அவர் தொடர்ந்து, பெரிய கட்சியின் தலைவரே அரசு அமைக்க வேண்டும் என்ற கொள்கையை ஒத்தி வைக்கவும் தயாராக இருக்கிறேன். சொல்லப்போனால், ஐசன்கோட்டின் யஷார் கட்சியை விட 2.5 லட்சம் கூடுதல் வாக்குகளை எங்களுடைய லிகுட் கட்சி பெற்றுள்ளது என்றார்.

ஐசன்கோட்டுக்கு டிசம்பர் 6-ந்தேதி வரை ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர, 14 நாட்கள் கூடுதலாக கால அவகாசம் கேட்கவும் அவருக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், இஸ்ரேல் அரசியலில் அடுத்து என்ன நடக்க போகிறது? என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.