திருப்பூர்,
நீர்நிலைகளை தூர்வார இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இணையதளம் தொடக்கம்
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவற்றை புனரமைத்து மீட்டெடுக்கும் பணிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி அமைப்புகள், சமுதாய அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏரி இணையதளம் (https://eri.tn.gov.in) தொடங்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் இந்த ஒரே இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
தடையில்லா சான்று
இதன்மூலம் நீர்நிலைகளை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள இணையவழியாகவே வெளிப்படைத்தன்மையுடன் விண்ணப்பித்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் தடையில்லா சான்று பெற்றுக்கொள்ளலாம்.
நீர்நிலைகளை அவற்றின் அசல் கொள்ளளவுக்கு மீட்டெடுத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதும், குடிநீர் மற்றும் வேளாண் பாசன ஆதாரங்களை வலுப்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஊரக நீர்நிலைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

