சேலம்,
ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங் களில் அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி சுகாதார திட்டம்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவித்து, அவர்களின் உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் யோகா, இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் வட்டார அளவில் பள்ளி சுகாதார திட்டத்தை செயல்படுத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.1 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதற்கட்டமாக ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள தேர்வு செய்யப்பட்டு அங்கு வட்டார அளவில் பள்ளி சுகாதார திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
துரித உணவுகள்
வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு மாணவர்கள் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினர் அதிகளவில் துரித உணவுகள் (சிக்கன் ரைஸ், நூடுல்ஸ்) மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதன்தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையிலும், அரசு பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும் புதிய சுகாதார திட்டத்தை அமல்படுத்தப்பட உள்ளது. அந்த திட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள சுகாதார அலுவலர்கள், யோகா பயிற்சியாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
விழிப்புணர்வு
குறிப்பாக மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி அவசியம், பள்ளி பருவத்தில் செய்யக்கூடிய விஷயங்கள், செய்யக் கூடாதவைகள் குறித்து விழிப்புணர்வு மூலம் விளக்கம் அளிக்கப்படும்.
மேலும், தேவைப்பட்டால் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஓமலூர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை தொடர்ந்து அடுத்தகட்டமாக மற்ற ஊராட்சி ஒன்றியங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

