சென்னை,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, நேற்று மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மலைக்கு கீழே திரண்டு இருந்தனர். தீபம் ஏற்றப்பட்டபோது அவர்கள் விண் அதிர 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.
தீபம் ஏற்றியதை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தை சுற்றி அமைந்துள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜைகள் செய்து வழிபட்டனர். வீடுகள் முன்பாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி ஆகியவற்றை தீபத்தை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை தீபமேற்ற திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் அனுமதி அளித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

