சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றும் புவனேஸ்வரி என்பவர் தொடர்ந்த வழக்கில், கடந்த 2023 நவ.29-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி தரப்பில், 2 ஆண்டுகள் (809 நாட்கள்) கழித்து 2026-ல் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
தாமதத்துக்கான காரணங்களை குறிப்பிட்டு கல்வித் துறைதரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘2023 நவம்பரில் அரை யாண்டு தேர்வு, 2024 புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, மாணவர்களுக்கான செய்முறை மற்றும்பொதுத் தேர்வுகள், மக்களவைத்தேர்தல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம், 2025-ல் புத்தாண்டு, பொங்கல் விடுமுறை, செய்முறை மற்றும் பொதுத் தேர்வுகள், அக். 1 முதல் 8-ம் வகுப்புமாணவர்களுக்கான கலைத் திருவிழா, நவம்பர், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வு, 2026 புத்தாண்டு, பொங்கல் விடுமுறை,பிப்ரவரி மாத செய்முறைத் தேர்வுகள் என்று தொடர்ந்துபணிகள் இருந்ததால் மேல் முறையீடு செய்ய முடிய வில்லை’ என்று அதில் காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது: மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய ஏற்படும் தாமதத்தை நீதிமன்றங்கள் கவனமாக, தாராள மனதுடன் பரிசீலித்து உரிய காரணம் இருந்தால் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில் தாமதம் ஏற்பட்டதற்கு கல்வித் துறை கூறியுள்ள காரணங்கள் நீதித் துறையை கேலி செய்வதுபோல உள்ளது.
இதனால், தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் செலுத்த வேண்டும். அபராத தொகையை சம்பந்தப்பட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரியின் சம்பளத்தில் இருந்து வசூலிக்க வேண்டும்.
இதில் தொடர்பு உடையவர்கள் அனைவர் மீதும் தலைமைச் செயலர் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், கல்வி அதிகாரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: அமைச்சர் வெங்கட ரமணன் ஆஜராக உத்தரவு
