சென்னை: கரிம்பேடு ஏரியின் குறுக்கே பாதை அமைக்க அனுமதி வழங்கி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கரிம்பேடு கிராமத்தில் உள்ள சாவித்திரி ஏரி முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், சாலை அமைக்கும் பணிக்காக இந்த ஏரியின் குறுக்கே பாதை அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு, ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டத்துக்கு எதிரானது.
எனவே, ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, ஏரியை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “இதற்கு அனுமதி வழங்க நில நிர்வாக ஆணையருக்கே அதிகாரம் உள்ளது” என்று வாதிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வட்டார வளர்ச்சி அதிகாரி பரிந்துரையின் பேரில், தண்ணீர் செல்லத் தடையின்றி குழாய்கள் அமைத்து, பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த 2001 ஏப்.2-ம் தேதி வெளியிடப்பட்ட அரசின் சுற்றறிக்கை அடிப்படையில், பொதுப்பணி உள்ளிட்ட துறைகளின் ஆய்வுக்குப் பிறகு நில வகை மாற்றம் செய்யப்பட்டு ஆட்சியர் அனு மதியளித்துள்ளார்” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “நீர் நிலைகளில் இதுபோன்ற அனுமதி வழங்க நில நிர்வாக ஆணையருக்குத் தான் அதிகாரம் உள்ளது என்பதால், திருவள்ளூர் ஆட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இது தொடர்பாக நிலநிர்வாக ஆணையரிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தால், அவர் விரைந்து உரிய முடிவை எடுக்கலாம்” என்று உத்தரவிட்டனர்.
சிசிடிவி பதிவை 6 மாதம் பாதுகாக்க வேண்டும்: அடகு, நகைக் கடை உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தல்
